இந்தியவிற்காக இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமாரை பஞ்சாபில் கைது செய்திருக்கிறது டெல்லி போலீஸ். கடந்த மே 5-ஆம் தேதி மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் மற்றொரு மல்யுத்த வீரரான 23 வயதுடைய சாகர் ராணா இருவருக்கும் டெல்லியிலுள்ள சத்ராஸல் விளையாட்டு அரங்கின் கார் பார்க்கிங்கில் கை கலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் சாகர் ராணாவை சுஷில் குமாரும் மற்றும் அவரின் நண்பர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த சாகர் ரானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சாகர் ரானாவின் நண்பர்கள் சோனு, அமித் குமார் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து சுஷில் குமார் மீது டெல்லி காவல்துறையினர் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த சுஷில் குமார் தலைமறைவானார், அதனால் அவரை தேடும் பணி தீவிரமடைந்து. ஹரித்துவார் சென்றுவிட்டார், பின் ரிஷிகேஷில் இருக்கிறார் என்பது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாயின. ஒரு கட்டத்தில் சுஷில் குமார் நாட்டைவிட்டு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது.
மேலும் சுஷில் குமாரைப் பற்றிய தகவல் தெரிவித்தால் ரூபாய் 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. டெல்லி நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத உத்தரவை சுஷில் குமார் மற்றும் அவருடன் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 6 நபர்களுக்கு பிறப்பித்தது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர் அஜய் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் டெல்லி அழைத்து வந்து அவர்களை விசாரணை மேற்கொள்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2008-ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சுஷில்குமார், இன்று இது போன்ற ஒரு வழக்கில் சிக்கி கைதாகியுள்ளது, விளையாட்டு உலகையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.