ஒருவருக்கு உடம்பில் ஒரு நோய் ஏற்பட்டால் நம்முடைய உடம்பில் இருக்கும் எதிர்ப்பு சக்தி அதற்கு எதிரான பிறபொருளெதிரி என்ற ஆன்டிபாடியை உருவாக்கி சண்டை இடும். பின்னர் இந்த ஆன்டிபாடி செல்கள் மேமரி செல்களாக மாறி நமது எதிர்ப்பு சக்தியில் இருக்கும். அடுத்த முறை அந்த நோய் தாக்கும் போது இந்த ஆன்டிபாடிகள் மீண்டும் நோயுடன் சண்டையிட்டு நம்மை காக்கும். ஆன்டிபாடிகள் நம் உடம்பில் இருக்கும் ஒரு வகையான புரோட்டின். இந்த ஆன்டிபாடிகளின் அளவை வைத்து நமது உடம்பில் ஒரு நோய்க்கு எதிராக இருக்கும் எதிர்ப்பு சக்தியை அறிந்து கொள்ளலாம்.
மேலும் கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு ஒருவரின் உடம்பில் இருக்கும் ஆன்டிபாடி அளவை வைத்து அவர்களுடைய எதிர்ப்பு சக்தியை அறிந்து கொள்ளலாம். அதேபோல் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு உடம்பில் கொரோனா ஆன்டிபாடி உருவாகும். அந்த அளவை வைத்து நாம் தடுப்பூசி எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த காரணங்களால் ஆன்டிபாடி பரிசோதனை கொரோனா காலத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தற்போது இதை பரிசோதனை மையங்களில் ரத்த மாதிரியை கொடுத்து தான் பார்க்க முடியும்.
இந்நிலையில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ட் அப் நிறுவனமான பாத்ஷோத் கொரோனா ஆன்டிபாடியை கண்டறிய புதிய மின்வேதியியல் பரிசோதனையை தயாரித்துள்ளது. இந்த முறைக்கு எலக்ட்ரோ கெமிக்கல் எலிசா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை கொரோனா தொற்று உடன் தொடர்பு உடைய ஐஜிஎம்(IgM)மற்றும் ஐஜி ஜி(IgG) ஆன்டிபாடிகளை சரியாக கண்டறிய உதவுகிறது. இதன் காரணமாக எளிதாக கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை கணிக்க முடியும்.
இந்த இரண்டு ஆன்டிபாடியும் கொரோனா நோய் தொற்று நமது உடலை தாக்கும் எஸ்-1 புரோட்டின் உடன் தொடர்புடையது. எனவே நமது உடம்பில் கொரோனா நோய் எதிர்ப்பு எப்படி உள்ளது என்று இந்த பரிசோதனையில் துள்ளியமாக கணிக்க முடியும். மேலும் இது மின் வேதியியல் முறையை பயன்படுத்துவதால் இதில் முடிவுகளும் உடனடியாகவும் சரியாகவும் கிடைக்கும். இந்த பரிசோதனை கருவியை உருவாக்க மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் நிதியுதவி அளித்துள்ளது.
இந்த புதிய பரிசோதனை முறை மூலம் தடுப்பூசிகளின் செயல்பாட்டையும் எளிதாக ஆராய்ச்சி செய்ய முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பரிசோதனைக்கு ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது. ஆகவே இந்த பரிசோதனை முறை விரைவில் சந்தைக்கு வர உள்ளது. தற்போது பாத்ஷோத் நிறுவனம் இந்த புதிய முறை மூலம் 1 லட்சம் பரிசோதனை வரை செய்யும் திறன் கொண்டுள்ளது. தேவைப்பட்டால் இதை அதிகரிக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.