தெலங்கானாவில் அமைந்துள்ளது மஞ்செரியல் டவுன். இங்கு அமைந்துள்ளது டோரகாரிபல்லே கிராமம். இந்த கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தவர் கங்கையா. இவருக்கு வயது 80. இவருக்கு மல்லேஷ் என்ற மகனும், நான்கு மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகன் ஹமல்வாடியில் தனது குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார்.
மார்பில் ஓட்டையுடன் இருந்த முதியவர் சடலம்:
கங்கையாவின் மனைவி கடந்த 2014ம் ஆண்டு காலமாகிவிட்டார். இதையடுத்து, கங்கையா பெரியளவில் மகன் மற்றும் மகள்களுடன் தொடர்பில்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், சமீபகாலமாகவே கங்கையா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், திடீரென அவரது வீட்டைச் சுற்றி துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மற்றும் அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கங்கையா உடல் அழுகி சடலமாக கிடந்தார். குறிப்பாக, அவரது மார்பின் நடுப்பகுதியில் ஓட்டை இருந்தது. இதைக்கண்டு போலீசாரும், அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கைவிட்ட மகன், மகள்கள்:
இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் கங்கையா சமீபகாலமாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. அவரை கடந்த 2ம் தேதிக்கு பிறகு யாரும் பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அவர் உடல் அழுகிய நிலையைப் பார்க்கும்போது அவர் 3-4 நாட்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
அவரது மார்பின் நடுவில் இருக்கும் ஓட்டை அழுகிய அவரது உடலை நாய்கள் கடித்ததால் ஏற்பட்டிருக்கலாம்? அல்லது ஏதேனும் பூச்சிகள் கடித்ததால் ஏற்பட்டிருக்கலாம்? என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் துயரமான சம்பவம் என்னவென்றால் உயிரிழந்த கங்கையாவின் 4 மகள்களின் 2 பேர் திருமணமாகி அதே ஊரில் வசிக்கின்றனர். அவர் கடந்த 20 நாட்களாகவே தனியாக அந்த வீட்டில் இருந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
பின்னர், அழுகிய நிலையில் மீட்கப்பட்ட அவரது சடலத்தை போலீசார் உள்ளூர்வாசிகள் உதவியுடன் அடக்கம் செய்தனர். ஒரு மகன் மற்றும் 4 மகள்கள் இருந்தும் 80 வயதான தந்தை உடல் அழுகி ஆதரவற்ற நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Group 4 Exam Tips: கட்டாயம் இதை செய்யுங்க.. குரூப் 4 தேர்வில் பாஸாவது நிச்சயம்..! கடைசி நேர டிப்ஸ் தரும் பிரபல பயிற்சியாளர்!
மேலும் படிக்க: Mamata Banerjee: இந்தியா கூட்டணி ஆட்சியமைக்காது என நினைக்க வேண்டாம் - மம்தா அதிரடி பேட்டி...