முன்கூட்டியே செல்லுங்கள்:


இன்று காலை நடைபெறும் தேர்விற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே, தேர்வு மையங்களுக்குச் செல்வதை தேர்வர்கள் உறுதிச் செய்யுங்கள். ஏனெனில், லேட்டாக சென்றால் மையங்களில் அனுமதிக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல, இன்று முகூர்த்த தினம் என்பதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொது வாகனங்களில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், சரியாக திட்டமிட்டு, தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே செல்லுங்கள் என ஆலோசனை தருகிறோம்.


தேர்வு எழுதும்போது கவனிக்க வேண்டியவை:


உணர்ச்சிவசப்படாமல், வேகம் மற்றும் விவேகம் இரண்டையும் சரிவர கலந்து, கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என போட்டித் தேர்வு பயிற்சியாளர்கள் கூறுகின்றனர். தமிழ்ப்பாடம் தொடர்பான கேள்விகளுக்கு ஒரு மணி நேரத்திற்குள் பதில் அளித்துவிட வேண்டும். அப்போதுதான், மீதமுள்ள 2 மணி நேரத்திற்குள் பொது அறிவு மற்றும் நுண்ணறிவுத்திறன் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும். அதேபோல், நுண்ணறிவுத்திறன் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்கு, நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.


வெற்றிப்பெறுவதற்கான டிப்ஸ்: 


லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் இந்தத்தேர்வில் நீங்கள் ஜெயிப்பதற்கான டிபஸ் குறித்து, ரேடியன் போட்டி தேர்வு பயிற்சி மையத்தின் தலைவரும் பிரபல கல்வி ஆலோசகருமான ராஜபூபதியிடம் பேசினோம். இதோ, உங்கள் வெற்றிக்கான அவரின் ஆலோசனைகள்…


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV. அதாவது பொதுவாக குரூப் 4 தேர்வு என்று அழைக்கப்படுவது. இன்று ஜூன் மாதம் 9ம் தேதி காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். பொதுவாக பலரும் காலை 10 மணி என்று நினைப்பர், பத்து மணி கிடையாது ஒன்பதரை மணிக்கு ஆரம்பிக்கும். இது கொள்வகை அதாவது OMR முறை தேர்வு. மொத்தம் 200 வினாக்கள் 100 வினாக்கள் தமிழ் பாடத்தில் இருந்தும், மீதமுள்ள 100 வினாக்களில் 25 வினாக்கள் கணித திறனறிவு தேர்வு, 75 வினாக்கள் பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள். 
மொத்தம் 200 வினாக்கள் நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. எனவே 200 வினாக்களையும் கண்டிப்பாக குறிக்க வேண்டும். ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்கள் 300. 


மிக முக்கியமானவை- கவனம்:


கருமை நிறமாய் கொண்ட பந்து முனை பேனா அதாவது பால் பாயிண்ட் மட்டுமே பயன்படுத்த வேண்டும் இரண்டு, மூன்று பேனாக்கள் எடுத்துச் செல்லவும். ஒன்பதரை மணிக்கு ஆரம்பிக்கும். ஆனால் நீங்கள் 8:30 மணிக்கே அங்கு செல்ல வேண்டும். உங்களுக்கு ஓஎம்ஆர் 9 மணிக்கு வழங்கப்படும் அதை நிரப்புவது தொடர்பான அறிவுரைகளும் வழங்கப்படும். உங்களுடைய தேர்வு கூட அனுமதி சீட்டுடன் ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது நகல் கொண்டு வரலாம். காலை உணவு கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும், கூடவே தண்ணீர் பாட்டிலும்.. அனுமதி இருந்தால் ஒரு சிறிய டவல் அல்லது கைக்குட்டை எடுத்துக் கொள்ளலாம் என போட்டித்தேர்வு பயிற்சியாளர் ராஜபூபதி தெரிவித்தார். 


அவரிடம் தொடர்ந்து பேசும் போது, நீங்கள் படித்ததை வைத்து அதிக மதிப்பெண்கள் எடுத்து வேலையில் சேர்வது எப்படி என்பது குறித்து வழங்கிய சிறப்பு டிப்ஸை இனி பார்ப்போம்…


மிக மிக முக்கியமான டிப்ஸ்:


1. தெரிந்த கேள்விகளுக்கு பதட்டப்படாமல் கேள்வியை படித்து நன்கு உணர்ந்து விடை அளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தெரிந்த கேள்விகளுக்கு பதற்றத்தில் தவறாக விடையளிக்க கூடாது. Careless mistake என்னும் இந்த தவறால் பலருக்கு மதிப்பெண்கள் குறைகிறது.  
2. தமிழில் இலக்கண கேள்விகளை நன்கு புரிந்து விடை அளிக்க வேண்டும். பொருத்துதல் கேள்விகளுக்கு அனைத்தும் பொருந்துகிறதா என பார்த்து விடை அளிக்க வேண்டும். எது சரி என்று கேட்கிறார்களா அல்லது எது தவறு என்று கேட்கிறார்களா அல்லது சில சமயம் கீழ்க்கண்டவற்றில் எது தவறானது அல்ல என கேட்பார்கள் இதை உணர்ந்து விடை அளிக்க வேண்டும். 
3. தற்போது குறிப்பாக பொது அறிவில் சில கேள்விகள் படிக்க, விடையளிக்க அதிக நேரம் எடுத்துக்  கொள்பவையாக இருக்கும். எனவே வேகமாக படித்து விடை அளிக்க வேண்டும். 
4. எல்லா கேள்விகளுக்கும் ஒரே மதிப்பெண் தான் எனவே எந்த ஒரு குறிப்பிட்ட கேள்விக்கும் அதிக நேரம் யோசிக்க வேண்டாம், விடையளிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டாம். 
5. அடுத்து இன்னொரு முக்கியமான விஷயம். தேர்வு நெருங்க நெருங்க தேர்வு நாட்கள் நெருங்க நெருங்க எல்லாம் மறந்து விட்டது போன்ற ஒரு நிலை ஏற்படும். இது நல்ல அறிகுறி நன்றாக படித்தவர்களுக்கு இவ்வாறு ஏற்படும். இதனைக் குறித்து பதற்றம் கொள்ள வேண்டாம். இது ஒரு நல்ல அறிகுறியே, உங்களது நண்பர்களை கேளுங்கள் நன்றாக படித்த எல்லோருக்கும் இது வருவது இயல்பே.
6. கடைசி நேர திருப்புதல் எல்லா பாடத்திற்கும் அவசியம் குறிப்பாக கணித சூத்திரங்களை விரைவாக ஒரு முறை பார்க்கவும். குறிப்பாக சுருக்குதல், பரப்பளவு, கன அளவு போன்றவை.
7. அதேபோல நடப்பு நிகழ்வுகளையும், பொது அறிவு தரவுகளையும் வேகமாக REVISION செய்யவும்.
8. அலகு 8,9 இல் இருந்து அதிக கேள்வி கேட்கப்படும் எனவே தமிழர் பண்பாடு, தொல்லியல், திருக்குறள், நீதிக்கட்சி மற்றும் திராவிட இயக்கங்களின் சாதனைகள், குறிப்பாக அண்ணா, பெரியார், கலைஞர், ஸ்டாலின் போன்றவர்களின் முக்கிய திட்டங்கள் மீண்டும் திருப்புதல் அவசியம்.
9. எடுத்துக்காட்டாக பள்ளிக் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம் etc இது போன்ற பல திட்டங்கள் எப்போது ஆரம்பிக்கப்பட்டது, எங்கு இருந்து தொடங்கப்பட்டது எதற்கான திட்டம் போன்றவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
10. தேர்வு எழுதும் போது ஒரு சில கடினமான கேள்விகள் தென்பட்டால் அவற்றைக் கண்டு பதட்டம் அடையக் கூடாது. உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அந்த கேள்விகள் கடினமாகத் தான் இருக்கும். இதனை புரிந்து கொண்டு நன்றாக யோசித்து அதற்கும் உங்களால் சரியாக விடை அளிக்க முடியும். 
11. உங்களுக்கு தெரியாத சில கேள்விகளுக்கு உங்களுடைய மூளை இதை விடையளி என சொல்லும், ஆனால் நீங்கள் அதை கண்டுகொள்ளாமல் நீங்கள் ஒரு விடையளிப்பீர்கள் அது பொதுவாக தவறாகத்தான் இருக்கும். எப்படியும் இந்த கேள்வி உங்களுக்கு விடை தெரியாது, எனவே அப்படிப்பட்ட ஒரு சில கேள்விகளுக்கு மூளை செல்வதை கேளுங்கள். இது அறிவியல் பூர்வமான உண்மை.
12. தேர்வு அறையில் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு மூச்சுப் பயிற்சி செய்யவும். அதாவது சில தடவைகள் நன்றாக மூச்சை உள்ளிழித்து வெளிவிடவும்.
13. பதட்டமில்லாமல் அதே சமயம் இது போட்டி தேர்வு, எனவே தேர்வை நிதானமாக, வேகமாக எழுதினால் வெற்றி நிச்சயம்.


சிறந்த மதிப்பெண் வாங்கினால் போதும்:


அரசுப் பணி என்பதால், இந்தத்தேர்வுக்கு பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை பலர் போட்டியிடுகின்றனர். 6 ஆயிரத்து 244 இடங்களுக்கு கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள் என்பதில் இருந்தே, இந்த தேர்வின் மற்றும் வேலையின் முக்கியத்துவத்தை நம்மால் உணர முடிகிறது. இன்னும் சொல்லப்போனால், ஒரு காலி இடத்திற்கு, சுமார் 330 பேர், இந்தத் தேர்வின் மூலம் போட்டியிடுகிறார்கள் என்பது யதார்த்தம்.


ஆனால், இந்த தேர்வின் முக்கிய அம்சம் என்னவென்றால், குரூப் 4 தேர்வுக்கான இந்தப் பணிளுக்கு நேர்காணல் ஏதுமில்லை. எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணிக்குத் தேர்வு செய்யப்படுவர் என்பதால், சிறந்த மதிப்பெண்கள் வாங்கும்பட்சத்தில், அரசு வேலை உறுதி என்பதால், போட்டி கடுமையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால்தான், இவ்வளவு பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர் என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. 


எனவே, குரூப் 4 தேர்வு எழுதும் லட்சக்கணக்கானோர், நமக்காக மேற்காணும் டிப்ஸ்களை வழங்கிய போட்டித்தேர்வு பயற்சியாளர் ரேடியன் ராஜபூபதி சொன்னதையும் பின்பற்றி, வெற்றிப் பெற்று, அரசு பணியில் சேர்ந்திட வாழ்த்துகிறோம்.