மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கக் கோரி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 4ஆம் தேதி, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கிடைத்தது.
இழந்த செல்வாக்கை மீட்டெடுத்த காங்கிரஸ்: அதே சமயத்தில், இந்தியா கூட்டணி மட்டும் 235 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மட்டும் 99 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதோடு, மகாராஷ்டிரா மாநிலம் சங்லி தொகுதி சுயேச்சை எம்.பி. விஷால் பாட்டில், தனது ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு அளித்துள்ளார். இதனால், அதன் பலம் 100ஐ எட்டியுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த பல தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்து வந்த காங்கிரஸ், இழந்த செல்வாக்கை இந்த முறை மீட்டெடுத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணமும் இந்திய ஒற்றுமை நீதி பயணமும் கருதப்படுகிறது.
எனவே, ராகுல் காந்தியை அங்கீகரிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் பல தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் கார்கேவின் புது பிளான்: ராகுல் காந்தியை காங்கிரஸ் மக்களவை குழு தலைவராகவும் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பு பிரதமருக்கு வெறும் அரசியல் இழப்பு மட்டுமல்ல.
தனது பெயரால் ஆணையைப் பெற்று, பொய், வெறுப்பு, பாரபட்சம், பிரிவினை மற்றும் தீவிர மதவெறி ஆகியவற்றில் நங்கூரமிட்டு பிரச்சாரத்தை நடத்திய பிரதமருக்கு தனிப்பட்ட மற்றும் தார்மீக தோல்வியாகும். 2014ஆம் ஆண்டு முதல், ஜனநாயக அமைப்புகளை மட்டுப்படுத்தும் செயல்களுக்கு எதிராக மக்கள் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு செயலாளர் கே. சி. வேணுகோபால், "மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்குமாறு ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் காரிய கமிட்டி ஒருமனதாக வேண்டுகோள் விடுத்தது.
தேர்தலின் போது, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், பெண்கள் பிரச்னைகள், சமூக நீதி போன்ற பல முக்கிய பிரச்னைகளை எழுப்பினோம். இந்த பிரச்சினைகள் இப்போது நாடாளுமன்றத்திற்குள் மிகவும் திறம்பட பேசப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கு ராகுல் சிறந்த நபர்.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது சூழல் முற்றிலும் மாறியுள்ளது. தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் உற்சாகமாக இருக்கிறோம்.
காங்கிரஸை முடிக்க பல முயற்சிகள் நடந்தன. ஆனால், நாங்கள் வலுவாகவே இருந்தோம். மக்களைப் பிளவுபடுத்துவது என்ற ஒரே ஒரு செயல்திட்டமே பாஜகவுக்கு உள்ளது. எவ்வாறாயினும், காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் எங்கள் நிலைபாட்டிலும் உத்தரவாதங்களிலும் உறுதியாக நிற்கிறோம்" என்றார்.