மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படி (HRA) தொடர்பான விதிகளை நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை (DoE) புதுப்பித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட விதிகளின்படி, சில அரசு ஊழியர்களுக்கு சில காரணங்களால் HRA க்கு தகுதி கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது.
புதிய HRA விதிகள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் HRA, மத்திய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 7ஆவது ஊதியக் குழு (7வது CPC) பரிந்துரைகளின்படி ஊதிய மேட்ரிக்ஸில் நிர்ணயிக்கப்பட்ட அளவில், எடுக்கப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது வழங்குவது குறித்த விமர்சனங்கள் பல ஆண்டு காலமாகவே சில கேள்விகளை எழுப்பி வந்தன.
ஒரே வீட்டில் வசிக்கும் இருவருக்கும் வழங்குவது, அரசு வழங்கிய குவார்ட்ரஸில் இருப்பவர்களுக்கு வழங்குவது வீண் தானே என்ற கேள்விகள் எழும்பின. அதனை சரி செய்யும் விதமாக புதிய அறிவுறுத்தல்கள் வெளியாகி உள்ளன. புதிய அறிவுறுத்தல்கள் மத்திய அரசின் அனைத்து சிவில் பணியாளர்களுக்கும், பாதுகாப்பு சேவைகள் மதிப்பீடுகளிலிருந்து ஊதியம் பெறும் சிவில் ஊழியர்களுக்கும், இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொருந்தும்.
HRA or வீட்டு வாடகை கொடுப்பனவு என்றால் என்ன?
வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) என்றால் வாடகை வீடுகளில் வசிக்கும் சம்பளம் பெறும் நபர்களுக்கு அத்தகைய தங்குமிடம் தொடர்பான செலவினங்களைச் சமாளிப்பதற்காக வழங்கப்படுகிறது. இது மூன்று வகைகளில் X,Y மற்றும் Z என்று கொடுக்கப்படுகிறது.
மூன்று வகைகள் என்னென்ன?
- ‘X’ என்பது 50 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கானது. 7வது மத்திய ஊதியக் குழு (CPC) பரிந்துரைத்தபடி, HRA 24% வழங்கப்படுகிறது.
- 'Y' என்பது 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை மக்கள்தொகை கொண்ட பகுதிகளுக்கானது. இது 16% வழங்கப்படுகிறது.
- மக்கள் தொகை 5 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் இடத்தில் ‘Z’ கொடுக்கப்பட்டுள்ளது. இது 8% வழங்கப்படுகிறது.
புதிய நிபந்தனைகள்:
- ஒரு ஊழியர் மற்றொரு அரசாங்க ஊழியருக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க தங்குமிடத்தைப் பகிர்ந்து கொண்டால் அவர் அதற்கு தகுதி பெற மாட்டார். அதாவது ஒரே வீட்டில் இருவர் அரசுப்பணியில் இருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும்.
- மத்திய/மாநில அரசு, தன்னாட்சி பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரை-அரசு நிறுவனங்கள் (நகராட்சி, துறைமுக அறக்கட்டளை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், எல்.ஐ.சி போன்றவை) அவர்களின் பெற்றோர்/மகன்/மகளுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பில் வசித்திருந்தால் அவர்களுக்கும் இது கிடையாது.
- ஒரு அரசு ஊழியரின் மனைவிக்கு மேற்கூறிய நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றால் அரசு ஊழியரின் அதே நிலையத்தில் குடியிருப்பு வழங்கப்பட்டிருந்தால், அந்த ஊழியர் அந்த விடுதியில் தங்குகிறாரா? அல்லது தனித்தனியாக வாடகைக்கு இருக்கிறாரா? என்பதை பொறுத்து அமையும்.