திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்தல், மொட்டையடித்தல் போன்ற பல நேர்த்திக் கடன்களை செய்வது வழக்கம்.  இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, இலவச தரிசனம் மட்டுமல்லாது கட்டணம் செலுத்தியும் பல்லாயிரக்கணக்கானோர் சிறப்பு தரிசனம் செய்கின்றனர். இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படுகின்றது.


வைகுண்ட ஏகாதசி தரிசனம்:


அந்த வகையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து, பத்து நாட்கள் அதாவது வரும் 11ம் தேதி வரை திருப்பதியில்  சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ரூ.300 கட்டணத்தில் பரமபத வாசல் வழியாக தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. இதற்காக இலவச மற்றும் ரூ.300 செலுத்துவதன் மூலம் கிடைக்கும் சிறப்பு தரிசனங்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.


9ம் தேதி டிக்கெட் முன்பதிவு:


இந்நிலையில், வரும் 12ம் தேதி முதல் மீண்டும் இலவச மற்றும் ரூ.300 செலுத்தி சிறப்பு தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பின்படி, வரும் 12ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 28ம் தேதி வரையில், 300 ரூபாய் கட்டணத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை, வரும் 9ம் தேதி அன்று காலை 10 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் தங்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதேநேரம், பாலாலயம் தொடர்பான பணிகள் காரணமாக, பிப்ரவரி 22 முதல் 28ம் தேதி வரையில் சிறப்பு தரிசனத்திற்கான அனுமதி இருக்காது எனவும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாலாலயம் என்றால் என்ன?


2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி துவங்கி திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்க கோபுரத்திற்கு பொன் மூலம் பூசப்பட்ட புதிய தகடுகள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த பணி சுமார் ஆறு மாதகாலம் நடைபெறும் என கூறப்படுகிறது.  இந்த சமயத்தில் பாலாலயம் செய்யப்படும்போது வேறு ஒரு மூலவரை ஏற்பாடு செய்யும் பணிகள் நடைபெறும். இதற்கு முன்னர் 1957- 58 ல் புதிய தங்க தகடுகள் பொருத்தப்பட்ட போதும், 2018 ஆம் ஆண்டு பாலாலயம் நடைபெற்ற போதும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.


எனவே அந்த சமயத்தில் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் தற்போது இருக்கும் மூலவரையும் வழிபடலாம். அதே நேரத்தில் பாலாலயம் செய்யப்பட்டு புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் மூலவரையும் வழிபடலாம். ஆனால் மூலவருக்கு நடத்தப்படும் கட்டண சேவைகள் அனைத்தும் ஏகாந்தமாக நடைபெறும். அதே நேரத்தில் உற்சவருக்கு நடத்தப்படும் கல்யாண உற்சவம், கட்டண பிரமோற்சவம் ஆகியவை உள்ளிட்ட கட்டண சேவைகளில் மாற்றம் ஏதும் இருக்காது.