Viral Video :  கர்நாடக கோயிலில் பெண் ஒருவரை கோயில் நிர்வாகி தாக்கி தரதரவென வெளியே இழுத்து சென்றுவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலம் பெங்களூரு அம்ருதஹள்ளி பகுதியில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் ஒன்று உள்ளது. அங்கு பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் சென்றுள்ளார்.  கோயிலில் அப்போது கூட்டம் அதிகம் இல்லாத நேரம். அந்த நேரத்தில் கோயிலுக்குள் நுழைந்த அந்த பெண்ணிடம் கோயில் நிர்வாகி ஏதோ பேசியிருக்கிறார்.


பின்னர், அங்கிருந்த அந்த பெண்ணை கோயில் நிர்வாகி வெளியே போக சொல்லியதாக தெரிகிறது. கோயிலில் இருந்து வெளியே செல்ல மறுத்த அந்த பெண்ணின் கையை பிடித்து வெளியே இழுத்து வர முயன்றள்ளார். அதற்கு அந்த பெண்,  "நான் சாமி கும்பிடதானே வந்தேன்? நான் ஏன் வெளியே செல்ல வேண்டும்? நான் சாமி கும்பிட்டு தான் செல்வேன்” என கூறியிருக்கிறார். அந்த பெண் கோயிலில் இருந்து வெளியே வரவில்லை. தொடர்ந்து அந்த கோயில் நிர்வாகியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


இதனால் கடும் கோபமடைந்த கோயில் நிர்வாகி, அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். உடனே அந்த பெண் தான் கோயிலில் இருந்து செல்லமாட்டேன் எனக் கூறி அந்த இடத்திலேயே அமர்ந்தார்.  பின்னர், அந்த பெண்ணை கன்னத்தில் அறைந்து, தரதரவென முடியை பிடித்து இழுத்து கோயில் சன்னத்தியில் இருந்து வெளியேற்றினார்.  ஆனாலும் அந்த பெண் கோயிலில் இருந்த வெளியேறாமல் இருந்த நிலையில், அருகில் இருந்த கம்பை எடுத்துக் கொண்டு அடிக்க ஓடி வந்தார்.


இந்த சம்பவத்தை நீண்ட நேரமாக பார்த்துக் கொண்டிருந்த கோயில் பூசாரி, கட்டையால் கோயில் நிர்வாகி அடிக்கத் தொடங்கியதும் அதை தடுக்க முயன்றுள்ளார். ஆனால் அதை கண்டுக்கொள்ளாமல் கோயில் நிர்வாகி அந்த பெண்ணை கட்டையால்  தாக்கியுள்ளார். இவை அனைத்தும் கோயிலில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் அம்ருதஹள்ளி  காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 






இதை அடுத்து, கோயில் நிர்வாகி  முனிகிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது, ” அந்த பெண் கோயில் கருவறைக்குள் நுழைய முயன்றுள்ளார்.  என் மீது சாமி வந்துவிட்டது. வெங்கடேஸ்வரா எனது கணவர். அவர் அருகில் நான் அமர வேண்டும் எனக் கூறினார். ஆனால் நாங்கள் அந்த பெண்ணை கோயில் கருவறைக்குள் விடவில்லை. இதனால் ஆத்திரமடைந்து பூசாரிகளில் ஒருவர் மீது அந்த பெண் எச்சில் துப்பினார். இதன் பின்னும் அவரிடம் பனிவாக வெளியே செல்லும்படி கூறப்பட்டது. அதை அவர் கேட்கவில்லை. அதனால் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பும் நிலை ஏற்பட்டது” என்றார்.