எந்த வகையிலும் எதிர்பாராத சில சுவாரசிய சம்பவங்கள் அவ்வப்போது இப்புவியில் நடந்து கொண்டே தான் உள்ளன. பிப்ரவரி மாதம் 29ம் தேதியில் குழந்தை பிறப்பது போன்ற பல சம்பவங்கள் இதற்கு உதாரணமாக உள்ளன. அந்த வரிசையில் தான், அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரட்டை குழந்தைகளை வெவ்வேறு ஆண்டுகளில் பெற்றெடுத்துள்ளார்.


வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டையர்கள்


டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த காளி ஜோ ஸ்காட் கருவுற்று இருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி பிரசவ வலி ஏற்பட உடனடியாக அவர் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவிலேயே அவருக்கு குழந்தை பிறந்துவிடும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காளி ஜோ ஸ்காட் தனது முதல் பெண் குழந்தையான குழந்தையை டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு 11:55 மணிக்கு பெற்றெடுத்தார். சற்று நேரத்திலேயே அவருக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்பட சரியாக 6 நிமிட இடைவெளிக்கு பிறகு மேலும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் மூலம் தனது இரட்டை குழந்தைகளை வெவ்வேறு ஆண்டுகளில் அந்த பெண் வெற்றிகரமாக பெற்றெடுத்துள்ளார். இது ஒரு அரிய நிகழ்வாகும்.


இரட்டை குழந்தைகளின் பெயர்:





தொடர்ந்து, 2022ம் ஆண்டு பிறந்த முதல் பெண் குழந்தைக்கு அன்னி ஜோ எனவும், 2023ம் ஆண்டு பிறந்த மற்றொரு பெண் குழந்தைக்கு எஃபி ரோஸ் எனவும் பெயர் சூட்டியுள்ளனர். தங்களுக்கு வெவ்வேறு வருடத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதை மகிழ்ச்சியோடு தம்பதியினர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.



சமூக வலைதளப்பதிவு:


காளி ஜோ வெளியிட்டுள்ள அந்த பதிவில், கணவர் கிளிஃப் மற்றும் நானும்,  அன்னி ஜோ மற்றும் எஃபி ரோஸ் ஸ்காட்டை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்! 2022 ஆம் ஆண்டு இரவு 11:55 மணிக்கு பிறந்த கடைசி குழந்தை அன்னி. 2023 ஆம் ஆண்டு 12:01 மணிக்கு பிறந்தவர் எஃபி. அவர்கள் இருவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் 5.5 பவுண்டுகள் எடையுடன் வெளியே வந்தனர். கிளிஃப் மற்றும் நானும் இந்த சாகசத்திற்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறோம் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கான வாயில்களை நோக்கி எனது பிள்ளைகள் தனித்துவத்துடன் முன்னோக்கிச் செல்லும் அம்சத்தை எனக்கு பிடித்துள்ளது என, தந்தை ஸ்காட் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்த தம்பதிக்கும், இரட்டையர்களுக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.