கர்நாடகாவில் சாலைகளில் உள்ள குழிகளை மூடி விபத்துகளை தடுக்குமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கும் 7 வயது சிறுமியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள திப்தூர் பகுதியை சேர்ந்த தவானி என்ற மாணவி ஹெக்கனஹல்லியில் உள்ள அரசு பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் கட்டிடத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தவானியின் தாய் ரேகா நவீன் சாலையில் இருந்த குழி காரணமாக விபத்துக்கு ஆளானார். இதனால் அவரது கால் எலும்பு முறிந்து உள்ளது.
இதன் காரணமாக சாலை குழிகளை மூட வேண்டும் என்ற குறிக்கோள் இளம் வயதிலெயே தவானிக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேற்கு பெங்களூருவில் தரமற்ற சாலையில் இருந்த குழி காரணமாக மாற்றுத் திறனாளி ஒருவர் தனது மூன்று சக்கர வாகனத்தில் பயணித்த போது விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தவானிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எப்படியாவது சாலை குழிகளை மூட வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் தவானி. அதில், தனது மழலை குரல் மாறாமல், ”தாத்தா, சாலை குழிகளால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் குடும்பங்கள் எப்படி அதை தாங்கும் என சொல்லுங்கள்?” என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மேலும் அந்த 7 வயது சிறுமியின் தாயும் சாலை பள்ளங்களை சீரமைக்க முதலமைச்சரை வலியுறுத்துமாறு தெரிவித்ததாக அவர் வீடியோவில் குறிப்பிட்டு உள்ளார். தான் அண்மையில் ஒரு வீடியோவை பார்த்ததாகவும், அதில் வெளிநாட்டை சேர்ந்த சிறுமி சாலைகளில் உள்ள பள்ளங்களை மூடிக் கொண்டு இருந்ததாகவும், அதுபோல் தாமும் சாலை பள்ளங்களை மூடப்போகிறேன் என பெற்றோரிடம் கூறியதாக தவானி தெரிவித்து உள்ளார்.
“நான் மிட்டாய்கள் வாங்கி சாப்பிட நான் தண்ணீர் குடிக்கும்போது எல்லாம் எனது தந்தை ஒரு ரூபாய் கொடுப்பார், அதை சாலையில் உள்ள பள்ளங்களை மூடும் பணிக்காக தான் சேமித்து வைத்திருக்கிறேன். இதுவரை 40 ரூபாய் சேமித்து வைத்து உள்ளேன்.”என சிறுமி தவானி பேசி இருக்கிறார்.
முக்கிய பிரச்சனையை வலியுறுத்தி முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு 7 வயது சிறுமி தவானி வெளியிட்டு உள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்கள் வைரலாகி வருகிறது. பலரும் அதை பகிர்ந்து முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.