கேரளத்தில் ஒரு கிராமம் முழுவதும் எங்கு திரும்பினாலும் இரட்டைக்குழந்தைகள் தான் நம் கண்முன்னே தெரிகின்றனர். அந்த அளவிற்கு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.


வாழ்வில் எந்தவொரு கஷ்டம் இருந்தாலும் குழந்தைகளின் முகத்தைப்பார்த்தால் அத்தனையும் மறந்துப்போகும் என்பார்கள். அவர்கள் செய்யும் சிறு சிறு செய்கைகள் கூட நம் மனதை இதமாக்கும். அதே வேளையில் மழலைகளின் சேட்டைகள் சிறு கோபத்தை தந்தாலும் பல நேரங்களில் ஒரு சந்தோஷத்தை தரும். அதுவும் வீட்டில் இரண்டு குழந்தைகள் என்றால் சொல்லவா வேண்டும். இரட்டிப்பு மகிழ்ச்சியாக தான் இருக்கும். அதே ஒரு கிராம் முழுவதும் இரட்டையர்கள் என்றால், சொல்லவா வேண்டும்… எப்போதும் மகிழ்ச்சி தான். அப்படிப்பட்ட கிராமம் எங்கிருக்கிறது என்று கேட்கிறீர்களா? வேறொங்கும் இல்லை கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் நம் கேரளத்தில் தான்…





கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது கொடிங்கி கிராமம். இம்மாநிலத்தில் ஹாட் சுற்றுலாத்தளம் என்றாலும் அங்கு அனைவரும் வியந்துப்பார்க்கக்கூடிய பல விஷயங்களும் உள்ளது என்று தான் கூற வேண்டும். ஆம். சந்தை,பள்ளி என எங்குப்பார்த்தாலும் ஒரே மாதிரியான இருவரைப்பார்க்க முடியும். இப்ப தான் நாம அங்க பார்த்தோம்.. அதுக்குள்ள இங்க எப்படின்னு அனைவரையும் யோசிக்க வைக்கும் அளவிற்கு கிராமம் முழுவதும் இரட்டைக்குழந்தைகள். பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருக்கும் இவர்களைப்பார்த்தலே செல்பி எடுக்காமல் போகவே மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகவும் பிரபலமான இக்கிராமத்தில் ஏன் இப்படி? இரட்டையர்கள் மட்டும் பிறப்பதற்குக் காரணம் என்ன? என்பது குறித்து இங்கே நாமும் அறிந்துக்கொள்வோம்..


கேரளத்தில் கொடிங்கி கிராமத்தில் உள்ள வயதான இரட்டையர்களாக உள்ளார்கள் அப்துல் ஹமீது மற்றும் அவரது சகோதரி குன்ஹி காடியா அவர்கள்  இரட்டையர்களின் பிறப்புக் குறித்து தெரிவிக்கையில், ஆரம்பத்தில் ஆண்டுக்கு சில குழந்தைகள் மட்டுமே இங்கே இரட்டையர்களாகப் பிறந்துள்ளனர். பின்னர் இதன் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 2008 ஆம் ஆண்டு பிறந்த 300 குழந்தைகளில் 30 குழந்தைகள் இரட்டையர்கள். சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை தற்போது 60 ஆக உயர்ந்துள்ளது.  இதற்குக் குறித்து இரட்டையர்களின் பரம்பரைத்தன்மையை ஆராய்ந்தப்போதும், ஒரே மாதிரியான இரட்டையர்கள் இதுவரை பிறக்கவில்லை என ஆய்வுகள் கூறுகின்றது. இதனையடுத்து இதற்கானக் காரணம்  என்ன? என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்த நிலையில், சுற்றுச்சூழல், உணவுப்பழக்கம், தண்ணீர் போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளனர். மேலும் கடவுளின் தேசமான இக்கேரளத்தில் எங்களுக்குப் பிறக்கும் இரட்டைக்குழந்தைகளை வரப்பிரசாதமாகவே பார்க்கிறோம் என்கின்றனர் இக்கிராமத்து மக்கள்.





குறிப்பாக உலக அளவில் ஆயிரம் குழந்தைகளில் 4 குழந்தைகளாவது இரட்டைக் குழந்தைகளாகப் பிறப்பதாகவும், இந்தியாவில் ஆயிரம் குழந்தைகளில் 9 இரட்டைக் குழந்தைகள் பிறப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால்  கேரளத்தில் உள்ள  இந்த அதிசய கிராமத்தில் ஆயிரம் குழந்தைகளில் 45 குழந்தைகள் இரட்டையர்களாக உள்ளனர். நைஜீரியாவின் இக்போ என்ற நகரத்தைத்தான் உலகின் இரட்டையர்களின் தலைநகரம் என்று அழைக்கின்றனர். இங்கு ஆயிரம் குழந்தைகளில் 145 குழந்தைகள் இரட்டையர்களாகப் பிறக்கின்றனர். இதற்கு அடுத்ததாக, உலகிலேயே இரட்டைக் குழந்தைகள் அதிகம் பிறக்கும் இரண்டாவது இடமாக இக்கிராமம் திகழ்வதாகக் கூறப்படுகிறது.