பாகிஸ்தானின் வெற்றியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பாய் குர்தாஸ் பொறியியல் க்ல்லூரியில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதி அறைகளும் சூறையாடப்பட்டுள்ளன. இச்செய்தியை Scroll.in தளம் வெளியிட்டுள்ளது.


டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. இந்தியா நிர்ணயித்த 152 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விக்கெட் எதையும் இழக்காமலேயே எட்டியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் ஆசம் மற்றும் முகமது ரிஷ்வான் சிறப்பாக விளையாடினார்கள். உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவை முதன்முறையாக வெற்றி பெற்று வரலாற்றை மாற்றி அமைத்தது பாகிஸ்தான். 


இந்நிலையில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதன் காரணமாக காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் தங்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.


 “இந்த அறையின் நிலையை நீங்களே பாருங்கள். நாங்கள் கிரிக்கெட் ஆட்டத்தை இங்கிருந்துதான் பார்த்துக் கொண்டிருந்தோம். உத்தரபிரதேச மாணவர்கள் உள்ளே வந்து இப்படி செய்துவிட்டார்கள். நாங்கள் இங்கே படிக்கத்தான் வந்துள்ளோம். நாங்களும் இந்தியர்கள்தான்... இல்லையா?  எனில் பிரதமர் மோடி இதற்கு என்ன சொல்லப் போகிறார்?” என கேட்டுள்ளனர். 






இந்நிலையில் இது தொடர்பாக செய்தி இதழ்களுக்கு பேட்டியளித்துள்ள கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், வெளியில் ஏதோ சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்று பார்த்தோம். அப்போது  காஷ்மீரை சார்ந்த மாணவர்களை பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் தாக்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் அறைகளின் ஜன்னல்களை உடைத்து, நீங்கள் பாகிஸ்தானியர்கள் எனக் கத்திக் கொண்டிருந்தனர்” என தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலிசார் அங்கு சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பாகிஸ்தான் வெற்றிபெற்றபோது காஷ்மீர் மாணவர்கள் கொண்டாடியதன் எதிரொலியாக அவர்களை உத்தர பிரதேச மாணவர்கள் தாக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சூழலில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் உடனே கைது செய்யப்பட வேண்டும் என காஷ்மீரிலிருந்து கோரிக்கைகள் வலுத்துள்ளன. 






பாகிஸ்தான் வெற்றியைத் தொடர்ந்து  போட்டி முடிந்ததும் மைதானத்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர் மொகமட் ரிஸ்வானை, கேப்டன் விராட் கோலி கட்டிப்பிடித்து பாராட்டியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.  இந்தியா, பாகிஸ்தான் அணி வீரர்கள் நேற்று களத்தில் சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தியதை தமிழகத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.


இந்நிலையில் வட இந்தியாவில் விளையாட்டிலும் அரசியல் புகுத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.