கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை தற்போது இந்தியாவில் ஒரளவு கட்டிற்குள் வந்துள்ளது. எனினும் ஒரு கேரளா, மகாராஷ்டிரா மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் மீண்டும் சற்று கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இது சற்று கவலை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்துவது ஆகியவற்றில் தீவிரம் காட்டி வருகின்றனர். மற்றொரு புறம் கொரோனா நோய் பாதிப்பு மற்றும் அதன் எதிர்ப்பு சக்தியான ஆன்டிபாடி எவ்வளவு பேருக்கு இருக்கிறது என்பது தொடர்பாக ஐசிஎம்ஆர் ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று ஐசிஎம்ஆர் நடத்திய 4ஆம் கட்ட செரோ சர்வேயின் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இம்முறை செரோ சர்வேயில் முதல் முறையாக 6 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் இடம்பெற்று இருந்தன. இந்த ஆய்வு ஜூன்-ஜூலை மாதங்களில் நடைபெற்றன. அதன்படி 6-9 வயது வரை உள்ளவர்களில் 57.12%, 10-17 வயது வரை 61.6%, 18-44 வயது வரை 66.7%, 45-60 வயது வரை உள்ளவர்களில் 77.6%, 60 வயதுக்கு மேல் 76.7% பேருக்கு கோவிட் ஆன்டிபாடி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 65.8% ஆண்களுக்கும், 69.2 % பெண்களுக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் செலுத்தியவர்களுக்கு 81% இரண்டு தடுப்பூசி டோஸ் செலுத்தியவர்களுக்கு 89.8% கோவிட் ஆன்டிபாடி உள்ளதாக ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் கிராம மற்றும் நகர் புறங்களில் இந்த எண்ணிக்கை பெரியளவில் வேறுபாடுகள் இல்லை என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மொத்தமாக இந்தியாவில் 6 வயதிற்கு மேற்பட்ட 67.6 சதவிகித மக்களுக்கு கொரோனா ஆன்டிபாடி உள்ளதாக ஐசிஎம்ஆர் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பேசிய ஐசிஎம்ஆர் தலைவர் பலராம் பார்கவா,"தற்போது 4ஆம் கட்ட செரோ சர்வே முடிவில் சில முக்கியமான தரவுகள் கிடைத்துள்ளன. இம்முறை முதல் முறையாக 6-17 வயது குழந்தைகள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் தரவுகளும் நன்றாக இருக்கிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் மத்தியில் கொரோனா ஆன்டிபாடி 62 சதவிகிதம் மட்டுமே உள்ளது.
ஆகவே நாம் தேவையற்ற சமூதாய நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். அத்துடன் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இன்னும் தோராயமாக 400 மில்லியன் மக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி வரவில்லை என்பதால் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்பதே மருத்துவ வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
மேலும் படிக்க: எஸ்சி, எஸ்டி தவிர மற்ற சாதிகள் கணக்கெடுப்பு கிடையாது- உள்துறை இணையமைச்சர் நித்யானந்த்!