ஒரு நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஏனென்றால் மக்கள் தொகை சரியாக தெரிந்தால் தான் அதை வைத்து அரசுகள் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்டவற்றை சரியாக திட்டமிட முடியும்.  இந்தியாவில் முதல் முறையாக மக்கள் கணக்கெடுப்பு 1871-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இந்திய மக்களின் வயது, மதம்,சாதி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய முதல் கணக்கெடுப்பு அப்போது எடுக்கப்பட்டது. அதன்பின்னர் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது கடைசியாக 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.


இதுவரை இந்தியாவில் 15 முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் 2021ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கும் பணி தற்போது கொரோனா காரணமாக தடைபட்டுள்ளது. இந்நிலையில் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்தார். அதில், "இனிமேல் எஸ்சி, எஸ்டி பிரிவுகளில் வரும் சாதிகள் தவிர பிற சாதிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் எடுக்கப்படாது என்று மத்திய அரசு கொள்கை முடிவை எடுத்துள்ளது" எனத் தெரிவித்தார். 




ஏனென்றால் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு அவர்களுடைய மக்கள் தொகை அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆகவே அவர்களின் சாதி தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டும் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். அதாவது தற்போது வரை  எஸ்சி மற்றும் எஸ்டி  1950 ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள சாதிகள் மட்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 


முன்னதாக மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா அரசுகள் இம்முறை மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரியான கணக்கெடுப்பு எடுத்து தரவுகளை தரவேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தனர். ஆனால் தற்போது அதை மறுத்து மத்திய அரசு இந்த கொள்கை முடிவை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடங்குவதற்கான பணிகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டது. எனினும் கொரோனா பரவல் காரணமாக தற்போது வரை அந்தப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. 




நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையில் வரும் 2026ஆம் ஆண்டு வரை பழை இட ஒதுக்கிடு முறையே தொடரும். அதன்பின்னர் எடுக்கப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து தான் இடங்கள் ஒதுக்கீடு செய்வது மாற்றப்படும். அதாவது 2031ஆம் ஆண்டு எடுக்கப்படும் மக்கள தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து தான் மாநிலத்திற்கான இடங்கள் மற்றும் எஸ்சி எஸ்டி ஆகியோருக்கான இடங்களில் மாற்றம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: பெகசஸ் ஸ்பைவேரில் இருந்து Apple iphones பாதுகாப்பாக இருக்கிறதா?