கடந்த சில நாட்களாக ஊரெங்கும் ஒரே பேச்சுதான். பெகசஸ் ஸ்பைவேர் பற்றிய சர்ச்சைகள் நாடாளுமன்றம் வரை எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் ஐஃபோன் வாடிக்கையாளர்களுக்கு தங்களின் போன் ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அஜர்பைஜான் நாட்டில் ஒருவரது செல்போனை அந்த அரசாங்கமே ஊடுருவி ஒட்டு கேட்கிறது. அவருடைய ஃபோன் கேமராவை ஆக்சஸ் செய்து கண்காணிக்கிறது. அவரது செல்போன் மைக் மூலம் அவர் பேசுவதையெல்லாம் ஒட்டுக் கேட்கிறது. இந்தத் தகவலைப் படிக்கும்போது சாதாரண நபருக்கும் பயம் வரத்தானே செய்யும். அதனாலேயே நான் ஐஃபோன் வாங்கிவிட்டேன் எனக் கூறுகிறீர்களா? ஐஃபோனும் ஹேக்கர்களால் எளிதாக ஊடுருவப்படுகிறது என்பதை அறிவீர்களா?
அமெரிக்காவில் தீவிரவாதிகள் தடுப்பு நடவடிக்கையாக சில ஃபோன் எண்களை கண்காணிக்க உதவுமாறு ஆப்பிள் நிறுவனத்திடம் எஃப்பிஐ உளவு நிறுவனம் வேண்டுகோள் விடுத்தது. பலமுறை கோரிக்கை விடுத்தும் ஆப்பிள் நிறுவனம் செவிசாய்க்கவில்லை. பிறகென்ன எஃப்பிஐ தானே ஊடுருவிவிட்டது. இந்நிலையில் தான் 50,000 போன்கள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுகேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐஃபோன்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளன. எந்த மாதிரியான போனாக இருந்தாலும் அதனை ஊடுருவி அதன் மூலம் பயனாளரின் இருப்பிடத்தை அறியக்கூடியது பெகாசஸ் ஸ்பைவேர்.
என்எஸ்ஓ சிஇஓ ஷால்வே ஹூலியோ அளித்த பேட்டியில், ”நாங்கள் உலக நாடுகளின் உளவு பார்க்கும் அமைப்புகளுக்கு மட்டுமே இந்த ஸ்பைவேரை வழங்குகிறோம். இதன் மூலம் தீவிரவாதத்தை தடுக்கலாம் என உலக நாடுகள் நம்புவதால் அப்பாவி உயிர்காக்கும் கருவியாக நாங்கள் இதைக் கொடுக்கிறோம். ஆனால், பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் சாமானியர்கள், ஊடகவியலாளர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரின் செல்போன் ஒட்டுகேட்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எங்களின் கொள்கைக்கு எதிரானது. இவர்கள் யாரும் தீவிரவாதிகளோ, குற்றவாளிகளோ அல்ல. சாமானியர்களின் ஃபோனை எங்களின் மென்பொருள் கொண்டு ஒட்டுகேட்பது சரியல்ல. இது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்” என்று கூறினார்.
ஐஃபோன் எப்படி ஊடுருவப்படுகிறது?
ஐஃபோன்களை ஐ மெசேஜ் அனுப்பி பெகசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடுருவுகின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் அப்ளிகேஷன்களான Apple Photos, Apple Music, iMessage மூலம் பெகசஸ் கொண்டு ஊடுருவப்படுகிறது. ஆப்பிள் நிறுவனமோ தங்களின் பொருட்கள் மிகவும் பாதுகாப்பானவை என்றும் அவ்வப்போது எழும் பிரச்சினைகளுக்கு ஏற்ப அவற்றை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறோம் என தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற ஸ்பைவேரை உருவாக்க பல மில்லியன் டாலர் செலவழிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சிலரை ஊடுருவவே இவ்வாறான ஸ்பைவேர்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், இவை விரைவில் செயலிழந்துவிடும்.
ஐஃபோன்களை பாதுகாப்பானதாக மாற்ற அதனை அடிக்கடி அப்டேட் செய்யுங்கள். ஐஓஎஸ் 14 அப்டேட் பிளாஸ்ட்டோர் என்ற பாதுகாப்பு வளையம் ஐ மெஸ்ஸேஜ்களையும் கண்காணிக்கிறது.பெகாசஸ் ஸ்பைவேர் ஆய்வு ஐஃபோனும் முற்றிலுமாக பாதுகாப்பானது இல்லை என்றே தெரிகிறது.