மத்தியபிரதேச மாநிலம் போபாலில் 1980ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி பிறந்தவர் சிமலா பிரசாத், இவரின் தந்தை பகீரத் பிரசாத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாகவும், எம்பி ஆகவும் இருந்தவர். சிமலாவின் தாயார் மெஹ்ருனிசா பர்வேஸ் ஒரு பிரபல எழுத்தாளர் ஆவர், அவரின் எழுத்துச்சேவையை பாராட்டி பத்மஸ்ரீவிருதும் வழங்கப்பட்டுள்ளது. தனது பள்ளி படிப்பை புனித ஜோசப் கோட் பள்ளியில் படித்த சிமலா பிரசாத், கல்லூரியில் சமூகவியலில் தங்கப்பதக்கம் பெற்றவர்.



தனது பள்ளி நாட்களில் நடனம் மற்றும் நடிப்பதில் ஆர்வம் கொண்ட சிமலா பிரசாத் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும்போது பல்வேறு நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். மத்திய பிரதேச காவல்துறையில் தேர்வெழுதி டி.எஸ்.பி ஆக பொறுப்பேற்றபோதே அவர் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரானதுடன் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார். ஐபிஎஸ் ஆக எந்த பயிற்சி நிறுவனத்தையும் சிமலா நாடவில்லை, தனது சுய ஊக்கம் மற்றும் ஆய்வின் மூலமே யுபிஎஸ்சி தேர்வில் வென்றார்.


யுபிஎஸ்சி தேர்வில் வென்றது குறித்து கூறும் சிமலா பிரசாத், சிவில் சர்வீஸஸ் தேர்வை நான் எழுதுவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. எனது வீட்டின் சூழ்நிலைதான் தன்னை ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற விருப்பத்தை தூண்டியது.



மத்திய பிரதேச காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியபோது, தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர். நக்சலைட்டுகள் ஆதிக்கம் இருந்த பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நக்சல் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தியதன் மூலம் சிமலா பிரசாத் அதிகம் அறியப்பட்டார்.


டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது பாலிவுட் இயக்குநர் ஜைகாம் இமால், சிமலா பிரசாத் ஐபிஎஸை சந்தித்தார். அவரின் எளிமை மற்றும் அழகை பார்த்த பிறகு இமாம் தான் இயக்கவிருக்கும் அலீஃப் படத்தின் கதையை சிமலாவுக்கு கூறி,அதில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் சிமலா பிரசாத் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



 தான் பாலிவுட் படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்து கொண்ட சிமலா பிரசாத், 'இயக்குனர் இமாம் தனது ‘அலிஃப்' படத்தின் கதையை விவரித்தபோது, ​​மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நான் படத்தில் பணியாற்ற வேண்டும் என்று உணர்ந்தேன், என்றும் இமாமின் இந்த கோரிக்கையை என்னால் மறுக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.



அலீஃப் படமானது 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடந்த சர்வதேச திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்டு பெரும் பாராட்டை பெற்றதுடன், பிப்ரவரி 2017ஆ ஆண்டு திரையில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் 2019ஆம் ஆண்டில் வெளியான நாகாஷ் படத்திலும் சிறு நகரத்தில் பணியாற்றும் பத்திரிக்கையாளராக சிமலா பிரசாத் நடித்திருந்தார்.