கொரோனா இரண்டாவது அலையில் நாடு முழுவதும் இதுவரை 594 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகமாகவே இருந்தன. முதல் அலையில் இருந்து டாக்டர்கள் இரவு, பகல் பாராமல் தங்களின் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி வருகின்றனர். தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனாவுக்கு எதிராக டாக்டர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் இதுவரை 594 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 21 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையின்போது மொத்தம் 736 டாக்டர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த 17ஆம் தேதி டெல்லியை சேர்ந்த 26 வயதான மருத்துவர், கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழந்துள்ளார். இதுவரை உயிரிழந்த மருத்துவர்களில் மிகவும் குறைந்த வயதில் உயிரிழந்த மருத்துவர் இந்த அனஸ் முஜாஹித் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இந்தியா முழுவதும் 17ஆம் தேதி ஒரே நாளில் 50 மருத்துவர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவலை இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டது.
தற்போது கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வாக கூறப்படும் நிலையில், இந்தியா முழுவதும் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. கடந்த ஐந்து மாதங்களில் இந்தியாவில் 66 சதவீதம் மட்டுமே சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதுவரை இந்த மருத்துவர்களில் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே முழு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
2 -டி.ஜி மருந்து கொரோனாவிற்கு வரப்பிரசாதம்; பரிசோதனை செய்த செங்கல்பட்டு டாக்டர் பெருமிதம்!
இந்த சூழலில் தான், கொரோனா நோயாளிகளுக்கு முழு ஈடுபாடோடு மருத்துவர்கள் பணிபுரிந்துவருகின்றனர். ஆனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க குறைவான அளவிலேயே மருத்துவர்கள் இருப்பதால், ஓய்வின்றி தொடர்ந்து 48 மணி நேரம் வேலை பார்க்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இக்கட்டான சூழலில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை இந்திய மருத்துவ சங்கத்தினர் முன்வைக்கின்றனர். கொரோனா பேரிடர் காலத்தில் முன்களப்பணியாளர்களாக பணிபுரிந்து வரும் மருத்துவர்களின் உயிரிழப்பு பேரதிர்ச்சியாக உள்ளது.
கொரோனா முதல் அலையில் 736 மருத்துவர்கள் உயிரிழந்ததாக அறிக்கைகள் வெளியான நிலையில், அது இன்னும் அதிகமாகவே இருக்கும் என மருத்துவர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதே போல மருத்துவ பணியாளர்கள் பலரும் எண்ணற்ற அளவில் உயிரிழந்துள்ளனர்.
ஒரே நாளில் 50 டாக்டர்கள் உயிரிழப்பு; 26 வயது இளம் மருத்துவரும் தப்பவில்லை!