இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்படுத்திய பாதிப்பால் பெரும்பாலான மாநிலங்களில் நீண்ட காலத்துக்கு பொதுமுடக்கம் விதிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இரண்டாவது அலையின் தாக்கத்தால் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் வேலையை இழந்துள்ளனர்.


பல்வேறு துறைகளில் தொழில்கள் முற்றிலுமாக முடக்கப்பட்ட நிலை ஆகிவிட்டதால், பணியாளர்களின் வேலையும் இல்லை என்பது உடன்விளைவு ஆகிவிட்டது. கடந்த ஏப்ரலில் இருந்ததைவிட மே மாதத்தில் வேலைவாய்ப்பின்மை வீதமானது மூன்றில் இரண்டு பங்காக சரிந்துள்ளது. அதாவது, கடந்த ஏப்ரலில் 12 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மையின் அளவு சென்ற மாதத்தில் 8 சதவீதமாகக் குறைந்துவிட்டது.


கொரோனாவின் முதல் அலையைவிட இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. முடங்கிப்போயிருக்கும் பொருளாதாரத்தைத் திறந்துவிட்டால் பிரச்னையில் கணிசமான அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்றும் ஆனால் முழுமையாக சிக்கல் தீர்ந்துவிடாது என்றும் இதில் கருத்து கூறப்பட்டுள்ளது.


இந்தியப் பொருளியல் கண்காணிப்பு மையம்- சி.எம்.ஐ.இ.-யின் முதன்மைச் செயல் அலுவலர் மகேஷ் வியாஸ் இது பற்றிக் கூறுகையில், “ வேலையை இழந்தவர்கள் மீண்டும் இன்னொரு வேலையைப் பெறுவது கடினமானதுதான். இதே சமயம், அமைப்பாக்கப்படாத துறைகளில் பணியாற்றியவர்கள் ஓரளவுக்கு வேகமாக வேலையைப் பெற்றுவிட முடியும்; அமைப்பாக்கப்பட்ட துறைகளில் பணியாற்றுவோருக்கும் சிறந்த தரமான நிலையில் உள்ள வேலைகளை விரும்புவோருக்கும் இது காலம் பிடிக்கக்கூடியது. அதிகபட்சம் ஓர் ஆண்டுகூட ஆகலாம்.” என்று தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் வேலையின்மை வீதமானது நாடளவிய பொது முடக்கத்தால் உச்சபட்சமாக கடந்த ஆண்டு மே மாதத்தில் 23.5 சதவீதத்துக்குச் சென்றது. அதைவிட அதிகமாக கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கொண்டுபோய் விட்டுள்ளது என்றும் இதிலிருந்து மீள்வதற்கும் வழக்கமான சராசரி பொருளாதார ஆக்கச் செயல்பாட்டுக்குத் திரும்புவதற்கும் கணிசமான காலம் எடுக்கும்; மாநிலங்கள் மெதுமெதுவாகத்தான் அந்த இடத்தை நோக்கி நகரத் தொடங்கும் என்றும் பொருளியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.