கர்நாடகாவில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் கோயிலுக்கு சென்று கடவுளிடம் முறையிட்டால் சற்று நிம்மதியாக இருப்பதாக உணர்வார்கள். அந்த அத்தகைய கோயிலிலேயே பிரச்சினை ஏற்பட்டால் என்ன செய்வார்கள். அப்படி ஒரு சோக சம்பவம் தான் கர்நாடகாவில் நடந்துள்ளது. அங்குள்ள பெலகாவி மாவட்டத்தில் ஹூலிகட்டி என்ற கிராமம் உள்ளது.
இங்கு பைரேஸ்வரர் கரிம்மா தேவி கோயில் உள்ளது. சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் எப்போதும் மக்கள் கூட்டம் இங்கே நிரம்பி வழியும். தற்போது வருடாந்திர உற்சவ திருவிழா நடந்து வருகிறது. இதனால் அங்கு வழக்கத்தை விட சற்று அதிகமாக மக்கள் வருகை தந்திருந்தனர். இந்த திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதம் பரிமாறப்பட்டது. இந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிட்ட பக்தர்களுக்கு அடுத்த சில மணி நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட 51 பேர் உடனடியாக சாதவட்டியில் உள்ள மருத்துவமனை மற்றும் பெலகாவி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தார்வாட் மாவட்ட அரசு மருத்துவனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பெலகாவி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேசமயம் ஹூலிகட்டி கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறையினர் முகாமிட்டு பிரசாதம் சாப்பிட்ட பிற மக்களின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். கோயில் பிரசாதத்தில் கலக்கப்பட்ட பொருட்களால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டதா அல்லது வேறு ஏதுவும் பிரச்சினையா என்பது முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரிய வரும்.