உத்தரபிரதேச மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டியதாக ,வித்தியாசமான முறையில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவமானது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெல்மெட் அணியாததால் அபராதம்:
உத்தரபிரதேச மாநிலத்தில் ஜான்சி பகுதியைச் சேர்ந்த பகதூர் சிங் பரிஹார் என்பவர், உள்ளூர் டிரக்கர் சங்கத்தின் தலைவராக உள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு, போக்குவரத்து காவல்துறையினரிடமிருந்து அபராதம் குறித்த செய்தி வந்துள்ளது. அதில் ரூ. 1000 விதிப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பிடிபட்டதாக அதில் கூறப்பட்டது.
ஆனால் அவர் இருசக்கர வாகனத்தை ஓட்டவில்லை, தனது ஆடி காரை ஓட்டி வந்ததாக தெரிவிக்கிறார். பரிஹார் இந்த விஷயத்தை தெளிவுபடுத்துவதற்காக, போக்குவரத்து காவல்துறையை அணுகினார். ஆனால் மக்களவை தேர்தலுக்கு பிறகு இந்த பிரச்னை குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்ததாக கூறினார்.
வைரலாகும் வீடியோ:
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், பரிஹார் இந்தியில் பேசுகிறார். அதில் அவர் பேசியதாவது, “ஹெல்மெட் இல்லாமல் எனது காரை ஓட்டியதற்காக போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர். அதனால் நான் என் காரை ஹெல்மெட் அணிந்து ஓட்ட வேண்டும்; அவர்கள் மீண்டும் ஒரு அபராதம் விதித்தால் என்ன செய்வது?" என பேசியிருக்கிறார்.
பயனர் கருத்துக்கள்:
இந்நிலையில், சமூக வலைதளங்களில் பலரும் பலவிதமான விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன. அதில் ஒரு பயனர் தெரிவிக்கையில் "கார் ரேஸ் பந்தய ஓட்டுநர்கள் கூட ஹெல்மெட் அணிவார்கள்."
மற்றொரு பயனர் தெரிவிக்கையில், "உங்கள் வாகனத்துக்கு தவறான சலான் வழங்கப்பட்டால், சலான் வழங்கப்பட்ட அந்தந்த காவல் நிலையத்திற்கு பிழையைப் புகாரளிக்கலாம். முறையான சரிபார்ப்புக்குப் பிறகு, வழங்கப்பட்ட சலான் தவறுதலாக இருப்பதைக் கண்டறிந்தால், அவர்கள் அதைத் திரும்பப் பெறுவார்கள், மேலும் அந்த நபர் ஒரு ரூபாய் கூட செலுத்தத் தேவையில்லை என்றும் ஒருவர் தெரிவித்தார்.
மற்றொருவர் “சகோதரரே மிகவும் ஜாக்கிரதையா இருங்க, உ.பி.யில என்ன வேணும்னாலும் நடக்கலாம் என்று கருத்து பதிவிட்டுள்ளார். இந்நிலையில் காரில் சென்றவருக்கு ஹெல்மெட் அணியாமல் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.