புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேசிய ஜனநாயக சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் ஆட்சி அமைந்துள்ளது. முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பொறுப்பேற்றார். குறிப்பாக முதல்வர் பதவியேற்று 45 நாட்கள் மேலாகியும் அமைச்சரவையை இறுதி செய்வதில் இழுபறி நீடித்தது. குறிப்பாக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே அமைச்சர் பதவி யாருக்கு ஒதுக்குவது என்ற குழப்பம் நிலவியது. இந்தச் சூழலில் கடந்த 23-ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இதில் 5 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலில், பாஜகவிற்கு 2 அமைச்சர்களும் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 3 அமைச்சர்களும் ஒதுக்கப்பட்டது.


இந்நிலையில் நேற்று புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அதேபோல் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தேனி ஜெயக்குமார், லட்சுமி நாராயணன் மற்றும் சந்திரா ப்ரியங்கா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அப்போது அவர்கள் அனைவரும் இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப்பரப்பு என்ற கூறி அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். 






தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி பதவியேற்ற பிறகு மத்திய அரசு என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டி வந்தது. இதற்கு தமிழக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தேவையில்லாமல் அரசியல் காரணங்களுக்காக திமுக அரசு செய்கிறது என்றும் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் இது தொடர்பாக பாஜகவின் செயற்குழு கூட்டத்திலும் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் திமுக மற்றும் பாஜக இடையே கடும் வார்த்தை போரே நடைபெற்று வந்தது. 


இந்தச் சூழலில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ள புதுச்சேரி மாநிலத்திலும் இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப்பரப்பு என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் அந்தச் சொல்லின் பயன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எப்படி புதுச்சேரியில் அதேசொல்லை பயன்படுத்த ஒப்புக் கொண்டது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 




முன்னதாக புதுச்சேரியில்  45 நாட்கள் மேலாக நீடித்து வந்த அமைச்சரவையை இறுதி பட்டியல் தொடர்பான இழுபறி சரி செய்யப்பட்டது. அதன்படி 40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் பெண் உறுப்பினர் இடம்பெற்றுள்ளார். காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த என்ஆர் காங்கிரஸ் பெண் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.  ஏற்கெனவே சபாநாயகர் பதவி பாஜகவிற்கு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் செல்வம் புதுச்சேரி சட்டமன்றத்தின் சபாநாயகராக பொறுப்பு ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: PM Modi on Tamil: ''தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான்'' - பிரதமர் மோடி பேச்சு