தமிழ் மொழியின் மீதான என்னுடைய அன்பு என்றுமே குறையாது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மாதத்தின் கடைசி ஞாயிறுக்கிழமைகளில் வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அகில இந்திய வானொலி மூலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சி காலை 11 மணிக்கு தொடங்கு. அதன்படி, இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில், உரையாற்றியபோது, பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழி குறித்து மிகவும் பெருமையுடன் பேசினார்.
உலகின் பழமையான மொழியான தமிழின், தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான் எனக்கூறிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மொழியின் மீதான என்னுடைய அன்பு என்றுமே குறையாது என்றும், தமிழ் மீது மிகவும் பெருமிதம் கொள்வதாகவும் கூறினார். மேலும், உலகின் மிகப் பழமையான மொழி நம் நாட்டில் உள்ளது என்பதில் இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும் என்றும் தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு பேசினார்.
தடுப்பூசி போட தயங்குவது ஆபத்தானது
தடுப்பூசி போடாமல் தவிர்ப்பது சம்மந்தப்பட்ட நபருக்கு மட்டுமின்றி, அவரது குடும்பத்திற்கும் ஊருக்கும் ஆபத்தை விளைவிக்கும். இதனால் அச்சத்தை துறந்து மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். மேலும், அறிவியலையும், நமது விஞ்ஞானிகளையும் நம்ப வேண்டும் என்றும், தடுப்பூசி பற்றிய எதிர்மறையான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். நூறு வயதை தொட்டிருக்கும் எனது தாயாரும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டார் என்றும் பேசினார்.
ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கும், தமிழக வீராங்கனைக்கு பிரதமர் வாழ்த்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க செல்லும் வீரர்களின் பின்னணி குறித்தும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நெகிழ்ச்சியுடன் பேசினார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று கூறிய, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை சமூகவலைதளங்களில் #Cheer4India என்ற ஹேஷ்டேக் மூலம் ஊக்குவிப்போம் என்று கூறினார். மேலும், சென்னையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றதற்கும் பிரதமர் வாழ்த்து கூறினார். பவானியின் தாயார் தனது நகைகளை அடகு வைத்து வாள் வீச்சு பயிற்சிக்கு உதவியது நெகிழ வைப்பதாகவும் குறிப்பிட்டு பேசினார். மறைந்த விளையாட்டு வீரர் மில்கா சிங் குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.
பிரதமருக்கு பவானி நன்றி
இதனைத் தொடர்ந்து, ஒலிம்பிக் மற்றும் விளையாட்டு வீரர்களைப் பற்றி பேசிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய பவானி தேவி, பிரதமர் தங்களைப் பற்றி பேசும்போது, ஆதரவளிக்கும் போது இது எப்போதும் ஒரு உத்வேகம் அளிக்கும் என்றும் கூறினார்.