நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியது. கடந்த 24 மணிநேரத்தில் 46498 பேர் புதிதாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 3-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 998 பேர் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தனர். இதனையடுத்து, நாடு முழுவதும் 75 நாட்களுக்குப் பிறகு, இந்தியாவின் தினசரி கொரோனா இறப்பு எண்ணிக்கை முதன்முறையாக 1000-க்கும் கீழ் குறைந்தது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில், 10 லட்சம் மக்கள் தொகையில் அதிக அளிவிலான வருடாந்திர பாதிப்பை பதிவு செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. அதிகபட்சமாக பிரேசிலில் சரசாரி வருடாந்திர பாதிப்பு 64,000 ஆக உள்ளது.
மேலும், இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. 2021, மே 10ம் தேதி 37,45,247 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 5,68,048 ஆகக் குறைந்துள்ளது. சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 13,034 சரிந்துள்ளது. நாட்டில், தொடர்ந்து 45-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 58,540 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
உலகளவில் மற்ற நாடுகளை விட, தினசரி மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை மற்றும் வருடாந்திர பரிசோதனை எண்ணிக்கையிலும் இந்தியா முதலிடம் வகிக்கிறது. உதாரணமாக, இந்தியாவில் சராசரி வருடாந்திர பரிசோதனை எண்ணிக்கை (7- day rolling average) 17 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. இங்கிலாந்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், ஒரு நாட்டின் மக்கள்தொகை விகிதாசார அடிப்படையில், ரசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகாளை விட இந்தியாவின் தினசரி பரிசோதனை எண்ணிக்கை குறைவாக உள்ளது.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளில், உலகிலேயே 10 லட்சம் மக்கள் தொகையில் குறைவான இறப்புகளை காணும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து உள்ளது. இந்தியாவின் இறப்பு விகிதம் 1.3 சதவிகிதமாக உள்ளது.
இருப்பினும், கடந்த ஒரு வாரத்தில் உலகளவில் அதிகமான கொரோனா உயிரிழப்புகளை பதிவு செய்த இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. இந்தியாவின் வருடாந்திர சராசரி இறப்பு எண்ணிக்கை 1,291 ஆகும். பிரேசில் நாட்டில் இந்த எண்ணிக்கை 1806 ஆக உள்ளது.
மாநிலங்கள் விவரம்:
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கேரளாவில் நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஓடிசா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றன.
இருப்பினும், அருணாச்சல் பிரதேசம், சிக்கிம், மணிப்பூர், மேகலாயா, நாகலாந்து, மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா சமூக பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது. குறிப்பாக சிக்கிம், மேகாலயா, மிசோராம் ஆகிய மாநிலங்களில் வருடாந்திர தொற்று உறுதி விகிதம் ( weekly Positivity Rate) 10 சதவிகிதத்தை தாண்டியுள்ளது. மேலும், அநேக வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் விகிதமும் குறைந்து காணப்படுகிறது.