பொதுவாக நமக்கு உடம்பு சரியில்லை என்றால் நாம் நமது நண்பர்கள் அல்லது பெற்றோர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். ஆனால் கொரோனா காலத்தில் மருத்துவமனைக்கு செல்ல பலரும் பயந்து இருக்கும் சூழலில்,3 வயது சிறுமி ஒருவர் தனியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியான புகைப்படம் ட்விட்டர் தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. யார் அந்த சிறுமி? எதற்காக தனியாக மருத்துவமனைக்கு சென்றார்?


நாகாலாந்து மாநிலைத்தைச் சேர்ந்தவர் நட்சுமி பகுதியை சேர்ந்தவர் சிறுமி லிபாவி. இவருக்கு கடந்த சில நாட்களாக சளி மற்றும் இருமல் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் விரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இவருடைய தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் அருகில் உள்ள ஒரு இடத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் இருவராலும் இவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. இந்தச் சூழலில் அப்பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அவர் தனியாக சென்றுள்ளார். 




ஆரம்ப சுகாதார மையத்திற்கு தனியாக வந்த சிறுமியை கண்ட மருத்துவர் ஆச்சரியத்துடன் பார்த்து அவரை விசாரித்துள்ளார். மேலும் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அச்சிறுமி சரியாக முகக்கவசம் அணிந்து வந்துள்ளார். இதை அங்கிருந்த சுகாதார பணியாளர்கள் பாராட்டியுள்ளனர். அவருக்கு இருந்த லேசான சளிக்கு மருந்தையும் அவர்கள் அளித்துள்ளனர். 


இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அந்தப் பதிவில் இச்சிறுமி மருத்துவமனைக்கு வந்தது தொடர்பான படத்தை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு மிகவும் வைரலாகி வருகிறது. இதுவரை பலர் அந்தப் பதவை லைக் செய்துள்ளனர். அத்துடன் மற்றொரு பதிவில், "அந்த சிறுமியை நட்சுமி ஆரம்ப சுகாதார மைய ஊழியர்கள் மீண்டும் வீட்டில் சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த சிறுமி மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளார். மேலும் அவர் உடல் நலம் தற்போது சீராக உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார். 


 






கொரோனா அறிகுறி லேசாக இருந்தாலே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள பெரியவர்களே பயப்படும் சூழலில் இந்தச் சிறுமியின் செயலை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். மேலும் அவர் செல்லும் போது முகக்கவசம் அணிந்து சென்றதையும் பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: விலங்கு கொரோனா: மனிதனுக்கு பரவினால் என்ன ஆகும்? உலக ஆய்வுகள் சொல்வதென்ன!