'ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு கடைசியில் மனசுனைக் கடிச்சு...' என்று கிராமப்புறங்களில் பேசுவது உண்டு. ஆனால், கொரோனா வைரஸ் தலைகீழாக முதலில் மனிதரை ஆட்கொண்டு இப்போது பூனை, நாய், கீரி என ஆரம்பித்து புலி, சிங்கம் என உயிரியல் பூங்கா விலங்குகள் வரை தனது கோர வீச்சை விரிவுபடுத்தியிருக்கிறது. டென்மார்க்கில் மிங்க் வகை கீரிப்பிள்ளைகளுக்கு கொரோனா நோய் கண்டறியப்பட்ட நிலையில் அங்கு லட்சக்கணக்கான கீரிகள் கொல்லப்பட்டன. இதற்கு உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பலைகள் கிளம்பின. ஆனால், அதற்கு டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் மனிதனிடம் விலங்குகளுக்கு கொரோனா பரவி, பின்னர் அவை விலங்குகளில் உருமாறி மீண்டும் அது மனிதருக்குப் பரவினால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனக் கூறினர்.
பூனைகளில் கொரோனா..சீனாவின் ஹார்பின் கால்நடை ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆராய்ச்சியில், பூனைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படலாம். ஆனால் ஒரு பூனையிலிருந்து மற்றொரு பூனைக்கு அது பரவும் அளவுக்கு வீரியம் இருக்காது. பூனை, பூனைக் குடும்ப விலங்குகளை ஒப்பிடும்போது நாய்களுக்கு கொரோனா தாக்குவது சற்று குறைவாகவே இருக்கும். அதே நேரத்தில் கோழிகள், பன்றிகள், வாத்துகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாது என்று கூறியது. இதேபோல் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் வூஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சியின்போது பூனைகளுக்கு அதிகளவில் கொரோனா வைரஸ் கிருமியுடனான தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் சில நாட்களில் பூனைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் உறுதியானது. ஆனால், அந்தப் பூனைகளிடம் காணப்பட்ட வைரஸின் அளவு மற்ற விலங்குகளுக்கோ மனிதர்களுக்கோ பரவும் அளவில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
வீட்டு விலங்குகள் நிலை என்ன?வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுவரும் சூழல், விடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் பாதிக்கப்படலாம் என்ற சூழலும் உருவாகிவருகிறது. இந்தியாவில், கால்நடைகள் மற்றும் பறவைகளின் எண்ணிக்கை சராசரியாக 130 கோடி. கால்நடை வளர்ப்பையே ஆதாரமாக நம்பியிருக்கும் மக்கள் கோடானுகோடி பேர். கால்நடைகளுக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்கும் ஆபத்தை ஏற்படத்துக்கூடும். கால்நடை வாயிலாக இந்திய ஜிடிபிக்கு கிடைக்கும் பங்களிப்பு 30%. இந்தப் பெரும் பங்களிப்புக்கு ஆபத்து ஏற்படாதவாறு இப்போதிருந்தே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றனர். வீடுகளில் செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகள், கோழி, வாத்து போன்ற பறவைகள் வளர்ப்போர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவற்றிடமிருந்து விலகியிருப்பதைக் கடைபிடிக்கலாம். இதுவரை கால்நடைகளுக்கு கொரோனா எவ்வித பாதிப்பு ஏற்படுத்தாவிட்டாலும், அவற்றிற்கு வராமல் இருப்பதை நாம் உறுதி செய்யலாம் அல்லவா? சிங்கங்களுக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது நிச்சயமாக எச்சரிக்கை மணி இல்லை என்றால் எதிர்காலத்தில் கொரோனாவின் உருமாற்ற சாத்தியக்கூறுகளை புறந்தள்ளிவிடக்கூடாது