கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்த நிலையில், நிலைமைக்கு ஏற்ப மாநிலங்கள் தனித்தனியாக ஊரடங்கை அமல்படுத்தின. பிரதமர் மோடியும் அதையே அறிவுறுத்தியிருந்தார். கொரோனா கட்டுப்பாட்டில் ஊரடங்கைக் கடைசி ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்று அவர் யோசனை கூறியிருந்தார்.

டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி எனப் பலமாநிலங்களும் தங்களின் கொரோனா பாதிப்பு நிலவரத்தின் அடிப்படையில் ஊரடங்கை அமல்படுத்தியிருக்கின்றன. அதற்கான பலன்களையும் பெற்றுவருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் திங்கள் கிழமை (7 ஜூன்) முதல் ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படும் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.முழு ஊரடங்கை விலக்கிக் கொள்வதை மகாராஷ்டிரா ஐந்து கட்டமாகப் பிரித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.



 

இதோ அதுபற்றிய 10 முக்கியத் தகவல்கள்..

 

1. கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் (அதாவது அன்றாட தொற்று பாதிப்பு) அடிப்படையில் மாநிலத்தின் மாவட்டங்களை 5 பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளனர். அதுதவிர ஆக்ஸிஜன் படுக்கை வசதியும் இதற்குக் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

2. 5% மட்டுமே தொற்று உள்ள மவட்டங்கள், 25% ஆக்ஸிஜன் படுக்கை வசதி கொண்ட மாவட்டங்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் பூரண ஊரடங்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் பிரிவில் 18 மாவட்டங்கள் உள்ளன. இங்கு அனைத்து உணவகங்கள், மால்கள், சலூன்கள், சினிமா தியேட்டர்கள், கடைகளும் திறக்க அனுமதியளிக்கப்படுகிறது.

3. இரண்டாவது பிரிவில் 5%க்கும் கீழ் தொற்று பரவல் ஏற்படும் மாவட்டங்கள், 25 முதல் 40% ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட மாவட்டங்கள் வரும். இங்கு மற்ற நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டாலும், படப்பிடிப்புகளுக்கு அனுமதியில்லை.

4. லெவல் 2ல் இருக்கும் மாவட்டங்களில் கடைகள், ஹோட்டல்கள், மால்கள், ஜிம், சலூன்கள் திறக்கலாம். 50 நபர்களுடன் திருமணங்களுக்கு அனுமதியளிக்கப்படும்.

5. அலுவலகங்களை முழு அளவிலான ஊழியர்களுடன் திறக்கலாம்.

6. மும்பை உள்ளூர் ரயில்களுக்கு அனுமதியில்லை. பேருந்துகளை முழுவீச்சில் இயக்கலாம் ஆனால் ஸ்டாண்டிங்கில் பயணிகள் பயணிக்கக் கூடாது.

7. மே 28 தொடங்கி ஜூன் 3 வரை மும்பையில் 5.56% மட்டுமே நோய் பரவல் பதிவாகியுள்ளது. தொழில்நகரமான மும்பை இதனால் 2வது பிரிவில் வருகிறது.

8. 5 முதல் 10 சதவீதம் தொற்றுபரவலும், 40 முதல் 60 சதவீத ஆக்சிஜன் படுக்கைகளும் கொண்ட மாவட்டங்கள் மூன்றாவது பிரிவிலும், 10 முதல் 20 சதவீதம் தொற்றுபரவலும், 60 முதல் 75 சதவீத ஆக்சிஜன் படுக்கைகளும் கொண்ட மாவட்டங்கள் நான்காவது பிரிவிலும் வருகின்றன. இவற்றிற்கு எவ்வித தளர்வும் இல்லை. 5வது பிரிவு 20 சதவீதத்துக்கு மேல் தொற்று பரவல் கொண்ட மாவட்டங்கள். இவற்றிற்கும் தளர்வுகள் இல்லை.

9. இத்தகவலி மகாராஷ்டிரா பேரிடர், மறுவாழ்வுத்துறை அமைச்சர் விஜய் வாடெட்டிவார் கூறியுள்ளார். இன்னும் அரசு இதை உறுதி செய்யவில்லை.

10. முதல்வர் உத்தவ் தாக்கரே ஊரடங்கு தளர்வுகள் பற்றி பரிசீலித்துவருகிறார். விரைவில் இதன் மீது முடிவு எட்டப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.