13 ஆண்டுகளுக்கு முன்பு, 26/11ல் அதாவது 26.11.2008 அன்று மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த  மக்களை இந்தியா இன்று நினைவுகூறுகிறது. 



மும்பைத் தாக்குதல்


 


26/11க்கு முன்னதாகவும்/ பின்னதாகவும் இந்தியாவில் பல்வேறு விதமான பயங்கரவாத  தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன . 90களில் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு, 90களின் பிற்பகுதியில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தொடர் பயங்கரவாத சம்பவம், 1999ல் அரங்கேறிய ஏர் இந்திய விமானம் கடத்தல், 2001 பாராளுமன்றத் தாக்குதல், 2011-ம் ஆண்டு மீண்டும் மும்பையில், ஓப்பரா ஹவுஸ், சவேரி பஜார் மற்றும் தாதரில் குண்டு வெடிப்புகள், உரி தாக்குதல், புல்வாமா தாக்குதல் போன்ற சம்பங்களையும் நம்மால் புறந்தள்ள முடியாது. இருப்பினும், இதர பயங்கரவாத நிகழ்வுகளை விட மும்பைத் தாக்குதல் சம்பவம் தான்  "தீவிரவாதம்" பற்றிய சொல்லாடலை மறுபரீசீலனை செய்யவைத்தது. 9/11 (அமெரிக்க வான்வழித் தாக்குதல்),13/11 (பாரிஸ் தாக்குதல்)  போன்ற அடைமொழியை மும்பைத் தாக்குதல் பெற்றது.  


நடுத்தர வர்க்க மக்களும் - தீவிரவாதமும்:


மும்பைத் தாக்குதல் ஒரு இடத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. மும்பை சத்ரபதி சிவாஜி முனையம் ,தி ஓபராய் டிரைடன்ட் ஓட்டல் , தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டவர், லியோபோல்ட் கஃபே, காமா மருத்துவமனை (பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை), நரிமன் ஹவுஸ் யூத சமூக கூடம் ,மெட்ரோ சினிமா, டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டிடத்தின் பின்னாலுள்ள வழிபாதை, சேவியர் புனித கல்லூரி ஆகிய எட்டு இடங்களில் இந்த கொடூர தாக்குதல் நடைபெற்றது. 


 


 



மும்பைத் தாக்குதல்


90களில் நடந்த மும்பை குண்டுவெடிப்புத் தாக்குதலிலும் ரயில்வே நிலையம், திரையரங்கம், மருத்துவமனைகள் குறிவைக்கப்பட்டன. இதன் தாக்கங்கள் உள்ளூர் மட்ட அளவில் தான் புரிந்துக் கொள்ளப்பட்டது. உலகலாகவிய தீவிரவாதம், சர்வதேச அமைதி  போன்ற பெருஞ்சொல்லாடலுக்குள் செல்லவில்லை. ஆனால், ஓபராய் டிரைடன்ட் ஓட்டல் , தாஜ் மஹால் பேலஸ் 26/11-ஐ பெருங்கதையாக்கியது. இந்தியா, தெற்காசியா என்பதைத் தாண்டி உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட சவாலாக உணரப்பட்டது.     


28ம் தேதி தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற தேடுதல் வேட்டை தொலைக்காட்சிகளில் நிகழ்நேரமாக ஒளிபரப்பப்பட்டதை நாம் அறிவோம். பகுப்பாய்வு செய்வதற்குப் பதிலாக நாளிதழ், தொலைகாட்சி, ரேடியோ என அனைத்து ஊடகங்களும் இந்த நிகழ்வின் அனுபவங்களை  சித்தரிக்கத் தொடங்கினர். ஒரு தீவிரவாதி இறந்துவிட்டான், இன்னொரு தீவிரவாதி நிலை என்ன? என்ற வர்ணனையின் மூலம் அனுபவங்களை வார்த்தைகளால் வடிக்கத் தொடங்கினர். இந்த அனைத்து முயற்சிகளும் நடுத்தர வர்க்க மக்களை சார்ந்ததாக இருந்தது.    




ஹர்ஷா போகலே,சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், சாருக் கான் போன்ற பிரபலங்கள் அனுபவச் சித்தரிப்பதில் ஈடுபட்டனர். அஞ்சலி கூட்டங்களாகவும், பாடல்களாகவும், ஓவியங்களாகவும், பாடல்களாகவும் நடுத்தர வர்க்கத்தினர் தீவிரவாதம் அனுபவங்கள் வெளிப்படுத்தினர். சுருங்கச் சொன்னால், மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் கிடைத்த அனுபவங்களை இந்திய நடுத்தர வர்க்கம் கையும், களவுமாக பிடித்துக் கொண்டது. 


9/11 20th Anniversary | மறக்க முடியாத தாக்குதலும்.. வேறு கோணத்தில் பார்த்த கண்களும்.. இது வடுவின் வலி!


நடுத்தர வர்க்கம், மும்பைத் தாக்குதல் சம்பவம் அரசியலாக்கவிரும்பவில்லை. 'பாகிஸ்தான்  ஒரு தீவிரவாத நாடு' என்ற ஒற்றை சொல்லாடல்களுக்குள் தங்கள் அனுபவங்களை முடக்கிடவில்லை. தகவல்களை தகவல்களாக மட்டும் பார்த்தது, நுகர்ந்தது, இருத்தலை உணர்ந்தது. இதன் வெளிப்பாடாகத் தான், இன்று வரை பாஜக, சிவசேனா  உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்பைத் தாக்குதலை மக்களை அணிதிரட்டி அரசியல்படுத்தாமல் திணறி வருகின்றனர். 26/11க்குப் பிறகு நடைபெற்ற 2009 மும்பை சட்டமன்றத் தேர்தலிலும், 2009 மக்களவைத் தேர்தலிலும் பாஜக உள்ளிட்ட தேசியவாத கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்தது. 


26/11ல் பாகிஸ்தான் நாடு மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊடகங்கள் கூச்சலிட்ட நிலையிலும்,  இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை அனைத்தும் எதிர்வினைக்குத் தயாராக இருந்த போதிலும், அப்போது ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான முற்போக்கு கூட்டணி பழிவாங்கும் நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கியது.  2019ல் நடந்த புல்வாமாத் தாக்குதலுக்குப் பிறகு நடந்த மக்களவைத் தேர்தலில், ஆளும் பாஜக மகத்தான வெற்றி பெற்றது என்பதும் இங்கு நினைவுக் கூறத்தக்கது.  



டைம்ஸ் ஆப் இந்தியா - தலையங்கம் 




2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் பேசிய பிரதமர் மோடி, "2016-ம் ஆண்டின் துல்லிய உரித் தாக்குதல் மற்றும் 2019ல் பிப்ரவரி வான்தாக்குதலுக்கு பின்பாக, இது பழைய இந்தியா இல்லை என்பதை பயங்கரவாதிகள் உணர்ந்திருப்பார்கள் என்று தெரிவித்தார்.  


ஓவ்வொரு  தீவிரவாத சம்பவவும் ஒருவகையான அனுபவ சித்தரிப்பு,  நியாபக மறதி, அரசியல் மேடை.சில தீவிரவாத நிகழ்வுகள் அரசியலாக்கப்படும், சில நிகழ்வுகள் அரசியலையும்,அரசியல்வாதிகளையும் ஓரங்கட்டும். சில நிகழ்வுகள் ரத்தம் சதை, பழிக்குப் பலி, மரண எண்ணிக்கை போன்றவைகளை பெரிதுபடுத்தும். சில, நிகழ்வுகள் அந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்ற அளவிலேயே யோசிக்கப்படும்.  சில, தீவிரவாத நிகழ்வுகளில் கொடூரமானதாக இருந்தும் அனுபவ சித்தரிப்பை ஏற்படுத்தமால் வலுவிழந்து போயிருக்கும்.  


Protest and Indian Democracy: போராட்டங்களே இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகள்!


சுருங்கச் சொன்னால், இந்தியா என்ற குற்றமற்ற ஆத்மாவுக்கு ஒரே வகையான தீவிரவாதியும், ஒரே வகையான தீவிரவாத நிகழ்வும் இருக்க முடியாது என்பதையே மும்பைத் தாக்குதல் சம்பவங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.