சிறுவர்கள் என்றாலே அவர்களது மழலைப் பேச்சும், அவர்களது குறும்புத்தனமும் எப்போதும் ரசிக்கும் வகையிலுமே இருக்கும். இந்த நிலையில், ஆந்திராவில் உள்ள குர்னூலில் சிறுவர்கள் சிலர் காவல்நிலையத்தையே காமெடி நிலையமாக மாற்றியுள்ளனர். அவர்களது வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


ஆந்திராவில் உள்ள குர்னூல் காவல் நிலையத்திற்கு 4 சிறுவர்கள் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 10 வயதிற்குட்பட்டவர்கள். அவர்களில் ஒரு சிறுவனிடம் காவல்துறையினர் “எதற்கு இங்கு வந்தீர்கள்?” என்று கேட்டதற்கு, அந்த சிறுவன் அளித்த பதில் காவல்நிலையத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.






காவல்துறையினர் கேட்ட கேள்விக்கு அந்த சிறுவன், நான் புகார் அளிக்க வந்துள்ளேன் என்று கூறியுள்ளான். அவனது பதிலால் ஆடிப்போன காவல்நிலையத்தில் இருந்த அனைவரும் அவர்களிடம் மேற்கொண்டு என்னவென்று கேட்டனர். அப்போது, அந்த நான்கு சிறுவர்களிடம் ஒரு சிறுவன் தன் அருகில் இருந்த மற்றொரு சிறுவனை கைகாட்டி, “ இவன் என்னுடைய பென்சிலை திருடிவிட்டான். இவன் மீது கேஸ் போடுங்கள்” என்று கூறியுள்ளான்,


அதைக்கேட்ட காவல்துறையினர் சிரித்துக்கொண்டே இதற்கெல்லாம் கேஸ் போட முடியாது என்று கூறியுள்ளனர். அதேநேரத்தில், மற்றொரு சிறுவனிடம் “பென்சிலை திருடினாயா?” என்று சிரித்துக்கொண்டே விசாரித்தனர். அதற்கு பதிலளித்த அந்த சிறுவன் “நான் திருடவில்லை. அங்கே இருந்தது. அதை நான் எடுத்து எழுதினேன்.” என்று கூறினான்.




ஆனாலும், புகார் கூறிய சிறுவன், “ தன்னுடைய ஷார்ப்னர் மற்றும் பென்சிலை காட்டி, பென்சில் மீது உள்ள அழிக்கும் ரப்பரை கழட்டிவிட்டான். இவன்மீது பெயிலில் வர முடியாத அளவிற்கு கேஸ் போடுங்கள்” என்று கூறியுள்ளான். இதைக்கேட்ட காவல்துறையினர் அனைவரும் சிரித்துவிட்டனர்.


பின்னர், மற்றொரு சிறுவனிடம் திருடுவது தவறு. இனிமேல் இதுபோன்று செய்யக்கூடாது. இந்த மாதிரி விவகாரங்களை பெற்றோர்களிடம் கூறுங்கள். காவல்நிலையத்தில் இந்த விஷயத்திற்கு வழக்குப்பதிவு செய்ய முடியாது என்று அறிவுரை கூறியதுடன், இருவரையும் சிங்கம் பட பாணியில் கை கொடுக்க வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும், அந்த சிறுவன் கடைசி நேரத்திலும் “திருடுவது தவறுதானே.. திருடினால் கேஸ் போடனும்தானே?” என்று குழந்தைத்தனமாக கேட்டான். காவல்துறையினர் மீண்டும் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.


இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், புகார் அளித்த சிறுவன் மற்ற இரண்டு சிறுவர்களையும் சாட்சி கூறுவதற்காக அழைத்து வந்துள்ளான் என்பதே. இந்த விஷயங்கள் அனைத்தையும் வீடியோவாக எடுத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறது.