நியூயார்க்கில் உள்ள இரட்டைக் கோபுரம் தாக்குதல் சம்பவத்தின்  இருபதாவது ஆண்டின் நினைவுத் தினத்தை முன்னிட்டு அமெரிக்கா மக்கள் துயரஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


அல்கொய்தா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் முதல் உலகளாவிய வரலாற்று சம்பவமாக கருதப்படுகிறது. மேலும், இதை உலகளாவிய வராலாற்று சம்பவமாக மாற்றியதில் அமெரிக்கா முக்கிய பங்கும் வகிக்கிறது.  இந்த தாக்குதலில் 3000க்கும் அதிகமான மக்கள் மாண்டார்கள் என்பதைத் தாண்டி, பன்னாட்டு உறவுகளில் உள்ள அடிப்படை அரசியலை 9/11 கேள்வி கேட்பதாய் அமைந்தது. 


இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் 1990 வரை அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் இடம்பெற்ற பனிப்போர் காலத்தில் கூட  உலகநாடுகளுக்கு இடையிலான உறவு வெளிப்படையாக இருந்து வந்தது. கருத்தியில ரீதியாக வேறுபட்டு நின்றாலும், உலகளாவிய அமைதி என்ற எல்லைக்குள் தான் மோதல் போக்கைக் கொண்டிருந்தன. ஆனால், இரட்டைக் கோபுரத் தாக்குதல் இந்த அடிப்படையைத் தான் கேள்வி கேட்டது. முகம் தெரியாத ஒரு பயங்கரவாத அமைப்பு கூட உலக ஒழுங்கை சீர்குலைக்க முடியும் என்று எடுத்துக் காட்டிய நிகழ்வு தான் 9/11.  


இதனைத் தொடர்ந்து, பயங்கரவாத குழுக்கள் பேரழிவிற்கான ஆயுதங்களை கிடைக்காமல் செய்வதே உலக அமைதிக்கான நிரந்தர வழி என்ற சொல்லாடலை அமெரிக்கா முன்னெடுத்தது. இதன் விளைவாகத் தான், ஆப்கானிஸ்தான் போர் மற்றும் ஈராக் விடுதலைப் போரை மேற்கத்திய நாடுகள் முன்னெடுத்தன. அதாவது, மேற்கத்திய நாடுகளின் பார்வையில் ஒரு நாடு அபயாகரமானதா? இல்லையா? என்ற வரையறைக்குள் கொண்டு செல்லப்பட்டன.       


முதல் உலகளாவிய வரலாற்று சம்பவம் ஏன்?   


தீவிரவாதம் என்பதும், வன்முறை சம்பவங்கள் என்பதும் உலக நாட்டிற்குப் புதிதல்ல. இரண்டாம் உலக போருக்கு முன்பாகவே, Muslim Brotherhood என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வந்தது. இரண்டாம் உலகப் போரில் லட்சக்கணக்கான மக்கள் மாண்டனர். உண்மையில், சொல்ல வேண்டும் என்றால், 90களில் இருந்தே உலக வர்த்தக மையத்தை தகர்க்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தாலும், 9/11 சம்பவம் நமது தலைமுறை கண்டறிந்த முதல் உலகளாவிய வரலாற்று சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. 


இது அமெரிக்கா வல்லரசை அச்சுறுத்த வேண்டும், உயிர் பலிகளை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் அல்கொய்தா இதை முன்னெடுக்கவில்லை. மாறாக, இந்த தாக்குதல் சம்பவம்  ஏற்படுத்திய அழகியல் தன்மை தான் நம்மை மிரள வைத்தது.  தாக்குதல் சம்பவத்தை காட்சியமைக்கப்பட்ட விதமே இதற்கு  முக்கிய காரணமாக உள்ளது.  உலக வர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலிற்கு பிறகு நடந்த தாக்குதல்களை ஊடகங்கள், தொடர்ந்து தங்களது காட்சி ஊடகத்தின் மூலம் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தனர். 


தேவைப்படும் உண்மைக்கும் அதிகமான உண்மைகளை ஊடகங்கள் மக்களிடம் காட்சிப்படுத்தியதன் காரணமாக   " விமானம் எப்படி மோதுது பார்" , "எப்படி கட்டிடம் சரியுது பார்"  என்ற வெளித்தோற்றங்கடந்த உள்ளார்ந்த தன்மை நம்மால் புரிந்து கொண்ட முடியவில்லை. உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களைத் தவிர உண்மையான இழப்பை நம்மில் பலராலும் உணர முடியவில்லை. சுருங்க, சொல்ல வேண்டும் என்றால், நம்மால் விளங்கிக் கொள்ளவே முடியாத ஒரு காட்சி வடிவங்களாகத் தான் அவை இருந்தன




நன்மைக்கும்/தீமைக்கும், வலியவருக்கும்/ எளியவருக்கும் என்ற இருதுருவ நிலைப்பாட்டை தாண்டி 9/11 தாக்குதல் சம்பவம் செல்கிறது. உதாரணமாக, உலகப்புகழ் பெற்ற கெர்மானிய இசையமைப்பாளர் Karlheinz Stockhausen 9/11 தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கையில், “the greatest work of art that has ever existed",  "And that is the greatest work of art that exists for the whole cosmos" என்று குறிப்பிடுகிறார். "கலைப் படைப்புகளில் இது ஆகச் சிறந்த ஒன்றாகும் ", "முழு பிரபஞ்சத்தில் மிகப்பெரிய கலைப் படைப்பாகவும் இது உள்ளது" என்று குறிப்பிடுகிறார். 


9/11 சம்பவம் முதல் தீவிரவாத தாக்குதல் சம்பவம் அல்ல/ ஆனால் தீவிரவாதத்தின் தன்மை என்ன என்பதை உணர்த்தியுள்ளது.  ஒருவிதமான கலையை, கவிதையை, கட்டுக்கதையை பயங்கரவாதம் தேடுகிறது. எனவே, பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற சொல்லுக்கான சமகால அர்த்தங்களை மறு ஆய்வு செய்யப்பட வேண்டிய சூழல் எழுந்துள்ளது