கடந்த ஜூன் 4ஆம் தேதி, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்து, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்காக டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து உரிமை கோரினார் நரேந்திர மோடி. இதையடுத்து மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் நாளை பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி.
தேசிய ஜனநாயக கூட்டணி
ஆட்சி அமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களை கொண்டுள்ளது. இதையடுத்து, பாஜக கூட்டணி கட்சி தலைவர்களிடையே பல கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் நரேந்திர மோடியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் முன்மொழிந்தார். அதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிமொழிந்தார். பின்னர், நாடாளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.
144 தடை:
இந்நிலையில், பிரதமராக நரேந்திர மோடி நாளை பதவியேற்க உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லியில் நாளையும் நாளை மறுநாளும் 144 தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பாதுகாப்பானது பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் , சுற்றுவட்டார பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்டவையும் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு , குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.