ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது ஜிந்த் மாவட்டம். இந்த மாவட்டத்தில் த்ரோபால் பயிற்சி மையம் ஒன்று உள்ளது. இதன் பயிற்சியாளராக கிருஷ்ணகுமார் என்பவர் உள்ளார். இவரது பயிற்சி மையத்தின் கீழ் ஏராளமான ஆண்கள், பெண்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.


14 வயது சிறுமி:


இந்த நிலையில், இவரது பயிற்சி மையத்தில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் பயிற்சியாளராக உள்ளார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பயிற்சி உள்ளதாக அந்த சிறுமிக்கு கிருஷ்ணகுமார் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும், பயிற்சிக்கு தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக நர்வானாவில் உள்ள பர்னிச்சர் கடைக்கு வருமாறு அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


அந்த சிறுமியும் தனது பயிற்சியாளர் கூறியபடி நர்வானாவில் உள்ள பர்னிச்சர் கடைக்கு சென்றுள்ளார். அப்போது, அந்த கடையின் பாதுகாவலரும், கடையின் உரிமையாளரும் வெளியில் சென்றுள்ளனர். மேலும், அந்த கடையில் பயிற்சியாளர் கிருஷ்ணகுமாரின் நண்பரும் ஏற்கனவே தயாராக வந்து அங்கிருந்துள்ளார்.


பாலியல் வன்கொடுமை:


பர்னிச்சர் கடையில் யாரும் இல்லாத அந்த சமயத்தில் பயிற்சியாளர் கிருஷ்ணகுமாரும், அவரது நண்பரும் இணைந்து அந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.




இந்த சம்பவத்தால் கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுமி வீட்டிற்கு அழுதுகொண்டே சென்றுள்ளார். அவரிடம் அவரது தாயார் விசாரித்தபோது, நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் உடனடியாக சர்தார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பயிற்சியாளரை கைது செய்துள்ளனர். கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த பயிற்சியாளரின் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். தன்னிடம் பயிற்சி பெற்று வந்த 14 வயது சிறுமியை பயிற்சியாளரை நண்பருடன் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.


நாட்டில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள், பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவது நாட்டு மக்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது.


மேலும் படிக்க: Crime: லாரியில் சிக்கிய பெண்; தலை துண்டாகி உயிரிழப்பு... கணவர் கண்முன்னே சோகம்...சென்னையில் பயங்கரம்!


மேலும் படிக்க: ‘நான் செயின் ஸ்மோக்கர்' ..விமானத்தில் சிகரெட் பிடித்த இளைஞரால் நடுவானில் பரபரப்பு