Crime: சென்னை அடையாறில் லாரி மோதி கல்லூரி மாணவி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவி:
சென்னை தரமணி பகுதியைச் சேர்ந்தவர் ரகு. அவரது மனைவி ஹேமலதா (25). இவர் கிண்டியில் உள்ள செல்லம்மாள் கல்லூரியில் பி.எஸ்.சி. 2ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஹேமலதாவை தினந்தோறும் கல்லூரி மாணவி ரகு தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு செல்வார். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல் ரகு தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். காலை 8.45 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டனர். பைக்கில், ரகுக்கு பின்பு ஹேமலதா அமர்ந்திருந்தார். அப்போது, அடையாறு பகுதியில் மிகக்குறுகிய சாலையில் சென்று கொண்டிருந்த போது, திருவான்மியூரில் இருந்து அடையாறு நோக்கி சிமெண்ட் கலவை ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி ஒன்று வேகமாக வந்துக் கொண்டிருந்தது.
துடிதுடித்து உயிரிழப்பு:
அப்போது, ஹேமலதா, ரகு ஆகியோர் சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின்புறம் டிப்பர் லாரி வேகமாக மோதியது. இதில், நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்த ரகு சாலை ஓரத்தில் தூக்கி வீசப்பட்டார். மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த ஹேமலதா சாலையின் நடுவில் விழுந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த டிப்பர் லாரி ஹேமலதாவின் தலையில் ஏறி இறங்கியது. இதில் ஹேமலதா தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் சாலையின் ஓரத்தில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஹேமலதா தனது கண்முன் துடிதுடித்து இறந்ததை பார்த்து ரகு கதறி அழுதுள்ளார்.
லாரி ஓட்டுநர் கைது:
இதுகுறித்து அடையாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, படுகாயமடைந்த ரகுவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் ஹேமலதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி ஓட்டுநர் ஆசாத் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். கணவர் கண்முன்னை மனைவி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க