இணைய விளையாட்டுகள், குதிரைப் பந்தயம் மீது 28 சதவீத ஜிஎஸ்டி வரி:


டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50ஆவது கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில், இணைய விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இது எப்போதிலிருந்து நடைமுறைக்கு வரும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.


இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 51ஆவது கூட்டத்தில், இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இணைய விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோ விளையாட்டுகள் மீதான 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மாத காலத்திற்கு பிறகு, இந்த முடிவு குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "டெல்லி, கோவா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் ஆன்லைன் கேமிங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள 28 சதவீத வரியை மறுஆய்வு செய்யக் கோரியுள்ளன" என்றார். 


எப்போதிலிருந்து நடைமுறை? 


தொடர்ந்து பேசிய மத்திய வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா, "பந்தயம் மற்றும் சூதாட்டம் சட்டவிரோதமானது. எனவே, அதன் மீது வரி வதிக்கப்பட வேண்டும். ஆன்லைன் கேமிங்கிற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதால், தடை செய்யப்பட்ட மாநிலங்களில் இதுபோன்ற கேம்களை சட்டப்பூர்வமாக்க முடியாது" என்றார்.


ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவு, இந்தியாவில் கேமிங் துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏன் என்றால், நடப்பு நிதியாண்டில் கேமிங் துறையின் மதிப்பு 2.8 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது..


ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் இந்த முடிவு எந்தத் துறைக்கும் தீங்கு விளைவிக்காது என்று அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கையால் தொழில்துறையில் கடும் பாதிப்பு ஏற்படும் என ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. மேலும், இது தங்களின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என கேமிங் நிறுவனங்கள் புகார் கூறியுள்ளன.


கவலை தெரிவிக்கும் கேமிங் நிறுவனங்கள்:


இந்த முடிவு நிறுவனங்களுக்கான நிகர வரியை 1000 சதவீதம் வரை அதிகப்படுத்தும் என்று ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குற்றம்சாட்டியுள்ளன. அதேபோல, சட்டவிரோதமாக நடத்தப்படும் பந்தய தளங்களில் சேர பயனர்களை இது கட்டாயப்படுத்தலாம் என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது.


இந்திய கேமிங் நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்களை முதலீடு செய்ய விடாமல் இந்த முடிவு தடுத்து நிறுத்தும் என்றும் கவலை தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இதுகுறித்து கூறுகையில், "ஆன்லைன் கேமிங் தளங்கள் மீது 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி வதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுக்கப்படும்" என்றார்.