Rajasthan Electric Shock: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம் அடைந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் சோகம்:
2024 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் உலகெங்கும் இருக்கும் சிவாலயங்களில் சிறப்பு வழிப்பாடுகள் நடத்த மற்றும் இரவு நான்கு கால பூஜைகள் நடத்தப்படும். இந்த ஆண்டு மகா சிவராத்திரி வெள்ளிக்கிழமை பிரதோஷத்துடன் வருவது கூடுதல் சிறப்பாகும்.
இந்த நாளில், ராஜஸ்தானில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம் அடைந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த 14 குழந்தைகளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், இரண்டு குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் காயம்:
2 குழந்தைகளுக்கு 100 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளது என்று தெரிகிறது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் ராஜஸ்தான் அமைச்சர் ஹீரலால் நாகர் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளை பார்வையிட்டார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது மிகவும் சோகமான சம்பவம். இரண்டு குழந்தைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு 50 சதவீத தீக்காயமும், மற்றொரு குழந்தைக்கு 100 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அனைத்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
DMK - VCK Alliance: திமுக கூட்டணியில் விசிகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.. எந்தெந்த தொகுதி?
இங்கிலாந்து பிரதமரின் மாமியார் சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம்- பிரதமர் வாழ்த்து