மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த சின்னமான பானை சின்னத்தில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


நாடாளுமன்றத் தேர்தல் வருவதையோட்டி அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்பூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.


இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 


மேலும் திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின் நேற்று மதிமுக நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக உடனான தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்பின் இன்று சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில் திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி அல்லது விருதுநகர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இம்முறை உதய சூரியன் சின்னத்தில் இல்லாமல் தனி சின்னத்தில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் உடன்  நடந்த பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய தொகுதிகள் இதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் பானை சின்னத்தில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.