பிரபல கல்வியாளரும் இன்ஃபோசிஸ் நிறுவனரின் மனைவியும் இங்கிலாந்து பிரதமரின் மாமியாருமான சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுதா மூர்த்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் எனத் தற்போது அறியப்படும் சுதா மூர்த்தி, பொறியாளர், எழுத்தாளர், பேராசிரியர், சமூகத் தொண்டாற்றுபவர் என்று பல முகங்களை உடையவர். இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான டெல்கோ நிறுவனத்தில் பணியாற்றிய முதல் பெண் பொறியாளர் சுதா மூர்த்திதான்.

சமூக சேவையில் ஈடுபட்டு வந்த அவரை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்துள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’சமூக சேவை, மனிதநேயம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உத்வேகம் அளிக்கும், மகத்தான பங்களிப்புகளை அளித்தவர் சுதா மூர்த்தி. மாநிலங்களவையில் அவரின் இருப்பு பெண்களின் சக்திக்கு சிறந்த சான்று ஆகும்.
இது நமது நாட்டின் விதியை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் திறனை எடுத்துக்காட்டுகிறது. சுதா மூர்த்தியின் நாடாளுமன்ற பதவிக் காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நியமன எம்.பி.
கலை, அறிவியல், சமூக சேவை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நபர்கள் குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு ஆண்டுக்கு 12 உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது அட்டவணையின்படி, நியமிக்கிறார். அந்த வகையில் சுதா மூர்த்தி, மாநிலங்களவை உறுப்பினர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.