இந்தியாவிலிருந்து சுற்றுலா சென்றவர்களும், வேலைக்காக சென்றவர்களும் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு உக்ரைனுக்கு எதிராக போரில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக குஜராத்தைச் சேர்ந்த ஹமில் மங்கூக்யா என்ற வாலிபர் போரில் ட்ரோன் தாக்குதல் போது உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.
ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள்:
அடுத்த கட்டமாக முகமது ஹப்சன் என்ற ஐதராபாதத்தைச் சேர்ந்த வாலிபரும் போரில் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. மேலும் இந்தியர்கள் ஏழு பேர் ரஷ்ய ராணுவ உடையில் தாங்கள் வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் தான் இந்திய வெளியுறவுத்துறை செயலர் ரஞ்சித் ஜெயஸ்வால் இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞர்களை தொடர்பு கொண்டு பேச முயன்று வருவதாகவும், இதுவரை 20க்கும் மேற்பட்டோர் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார். மேலும் அவர்களை இந்தியாவிற்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்ததை அடுத்து சி.பி.ஐ. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்தியா முழுவதும் ஏழு நகரங்களில் இந்த விவகாரம் தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக டெல்லி, மும்பை, அம்பாலா, சண்டிகர், சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்கடத்தல்:
இந்த சோதனையின் மூலம் இந்திய இளைஞர்களை ரஷ்ய நாட்டிற்கு ஆட்கடத்தலில் ஈடுபடும் மிகப் பெரிய நெட்வொர்க்கை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக இந்த ஏழு நகரங்களில் உள்ள விசா கன்சல்டன்சி நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மூலமாக இந்த மோசடி அரங்கேறி இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்த ஆட்கடத்தல் கும்பல் சமூக வலைதளங்கள் குறிப்பாக youtube கள் ஆகியவற்றில் விளம்பரம் செய்து இளைஞர்களை ரஷ்யாவிற்கு கடத்தியது தெரியவந்துள்ளது. நல்ல வேலை அதிக சம்பளம் எனக் கூறியும் சுற்றுலா விசாவில் உல்லாச சுற்றுலா செல்லலாம் எனக் கூறியும் இளைஞர்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தரகர்கள் விசா நிறுவனங்கள் மூலமாக ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
உக்ரைன் போருக்கு பயன்படுத்தப்படும் அதிர்ச்சி:
அவ்வாறு ரஷ்யாவிற்கு சென்ற பிறகு ரஷ்ய ராணுவ உயர் அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்படுவதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ரஷ்ய இராணுவத்தில் பாதுகாப்பு உதவியாளர்கள் என்ற பெயரில் சேர்க்கப்பட்டு முறையாக பயிற்சியளிக்காமல் உக்ரைனுக்கு எதிரான போரில் முன்னிலை வீரர்களாக நிறுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. அவ்வாறு சென்ற பல இந்திய இளைஞர்கள் படுகாயங்கள் அடைந்ததும் சமீபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. தரகர்கள் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு இந்திய இளைஞர்களை ரஷ்யாவிற்கு ஆட்கடத்தல் செய்ததாக சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ அதிகாரிகள் டெல்லியைச் சேர்ந்த 24x7 ராஸ் ஓவர்சீஸ் பவுண்டேஷன் மற்றும் அதன் இயக்குனர் சோயாஸ் முகூத், மும்பையைச் சேர்ந்த ஒ எஸ் டி ப்ராஸ் ட்ராவல் விஷாஸ் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் இயக்குனர் ராகேஷ் பாண்டே, பஞ்சாப்பை சேர்ந்த அட்வென்ச்சர் விசா சர்வீஸ் கிலோமீட்டர் என்ற நிறுவனமும் அதன் இயக்குனர் மஞ்சித் சிங், துபாயை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பாபா ப்ளாக் ஓவர்சீஸ் ரெக்ரூட்மெண்ட் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் இயக்குனர் பாபா என்கிற அப்துல் முத்திலீப் கான் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இன்னும் பலரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட உள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
35 பேர் கடத்தல்:
சிபிஐ இதுவரை 13 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 50 லட்ச ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் எலக்ட்ரானிக் ஆதாரங்கள் லேப்டாப் மொபைல் டெஸ்க்டாப் சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் 35க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தியாவிலிருந்து ஆட்கடுத்தப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே இது போன்ற மோசடி தரகர்கள் மற்றும் விசா நிறுவனங்களை நம்பி அதிக சம்பளத்தில் வேலை கிடைப்பதாக வெளிநாடுகளுக்கு சொல்ல வேண்டாம் சிபிஐ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.