கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலையில் அமைந்துள்ளது அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். புகழ்பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றான சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில், அங்கிருக்கும் வெள்ளிவேல் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கு கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
மருதமலை முருகன் கோயிலில் திருட்டா?
மருதமலை முருகன் கோயிலுக்கு சொந்தமான 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிவேல் திருடப்பட்டதாகவும், அதை சாமியார் ஒருவர் அதை திருடி செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதையும் படிக்க: என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்.. கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க - சிபிஎம் மாநாட்டில் சூளுரை
இந்த நிலையில், வெள்ளிவேல் திருடப்பட்டதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்த கோயம்புத்தூர் மண்டல இணை ஆணையர் ரமேஷ், "கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மருதமலை அடிவார வேல் கோட்ட தியான மண்டபத்தில் நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் 3 கிலோ, 100 கிராம் எடையுள்ள வெள்ளிவேல் கயவர்களால் திருடப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகம் சொன்னது என்ன?
இது தனியாருக்கு பாத்தியப்பட்ட தியான மண்டபம். இதன் நிர்வாகியாக குருநாதசாமி என்பவர் இருந்து வருகிறார். இந்த தியான மண்டப வெள்ளிவேல் மட்டுமே இருந்து தியானம் செய்யப்பட்டு வந்துள்ளது.
மேற்கண்ட தியான மண்டபமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தியான மண்டபம் இல்லை. மேலும் இந்த சம்பவம் மருதமலை முருகன் கோயிலில் நடைபெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான செய்தி வெளியானதில் இருந்தே பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக, குடமுழுக்கு நடக்கும் சூழலில் அபசகுணமாக இப்படி ஆகிவிட்டதே என கவலை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? ஏப்.7 தேர்வு ஒத்திவைப்பு- ஏன்? மறுதேர்வு எப்போது?