மத்திய மற்றும் மாநில அரசு உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என சர்க்காரிய கமிசன் மற்றும் பூஞ்சி கமிசன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென, கடந்த 2012 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி கேட்டார். நான் இப்போது பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்கிறேன், 3வது முறையாக பிரதமராக பதவியேற்றிருக்கிறீர்கள், இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன, 2 நாளில் தமிழ்நாட்டிற்கு வர போறீங்க, அப்போது சொல்கிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் சிபிஎம் மாநாட்டில் தெரிவித்தார்.
சிபிஐ ( எம் ) மாநாடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது 24வது அகில இந்திய மாநாட்டை நேற்று ( ஏப்ரல் 2 ) முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்தி வருகிறது. இம்மாநாட்டில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு, கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் குறித்து விவாதிக்கின்றனர்.
மாநாட்டின் முதல் நாளான நேற்றைய தினத்தன்று நடைபெற்ற மாநாட்டில் இரண்டு தீர்மானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன. 01) தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக, மத்திய தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்த 'மே 20, 2025 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்' என்பது முதல் தீர்மானமாகும். தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கட்சி மாநாடு தனது முழு ஆதரவை வழங்கியதுடன், பொது வேலை நிறுத்தத்தை தீவிரமாக ஆதரிக்குமாறு அதன் அனைத்து பிரிவுகளுக்கும் அழைப்பு விடுத்தது. 02. ஆர்எஸ்எஸ்-பாஜக மற்றும் சங்க பரிவாரின் கொடூரமான வகுப்புவாத தாக்குதல்களை எதிர்த்தல்' என்பது இரண்டாவது தீர்மானமாக மாநாட்டில் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது நாள் மாநாட்டில் கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சிபிஐ-எம் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், பெ.சண்முகம், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் உரை:
இம்மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “ இன்று தூங்கா நகரமான மதுரை சிவப்பு நகரமாக மாறியிருக்கிறது. திமுக கொடியில் உள்ள பாதி சிவப்பு; கொடியில் மட்டுமல்ல; எங்களில் பாதி பொதுவுடைமை இயக்கம். திராவிட இயக்கத்திற்கும் பொதுவுடமை இயக்கத்திற்கும், உள்ள நட்பு கருத்தியல் சார்ந்தது. தன்னை ஒரு கம்யூனிஸ்டாக அடையாளப்படுத்திக் கொண்டவர் கலைஞர் கருணாநிதி. உலக மாமேதை கார்ல் மார்க்ஸ்- ற்குச் சென்னையில் சிலை வைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்துவிட்டு, உங்களில் பாதியாக இம்மாநாட்டிற்கு வந்திருக்கக்கூடிய, என் பெயர் ஸ்டாலின்.
2019 ஆம் ஆண்டு முதல் இணை பிரியாமல் இருக்கிறோம். நாம் யாரை எதிர்க்க வேண்டும் என உறுதியாக இருக்கிறோம். நாம் பிரிந்துவிட வேண்டும் என எண்ணுகிறார்கள். யாரும், அதற்கு இடம் கொடுக்க மாட்டோம். மாநிலங்களில் ஆளுநரை வைத்துக் கொண்டு, கட்சி மாறச் சொல்லி கட்டாயப்படுத்துறீங்க, மாநிலங்களே இருக்க கூடாது என நினைக்கிறீங்க.
2012 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி கேட்டார். நான் இப்போது பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்கிறேன், 3வது முறையாக பிரதமராக பதவியேற்றிருக்கிறீர்கள், இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன, 2 நாளில் தமிழ்நாட்டிற்கு வர போறீங்க, அப்போது சொல்கிறோம்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல் என்பதுதான் பாஜகவின் நோக்கம். தொகுதி மறுவரையறை மூலம், கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க பார்க்கிறார்கள். நள்ளிரவில் வக்ஃபு சட்டத்தை நிறைவேற்றியுள்ளார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும்தான், இந்தியாவின் சுயாட்சி காப்பாற்றப்படும். மக்கள் நலனைக் காக்க நாம் ஒன்றுபட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாசிசத்தை எதிர்ப்போம் என சிபிஐ-எம் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.