கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு அருகே உள்ளது பரளிக்காடு இருளர் பழங்குடி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பால்பாண்டி - மீனா தம்பதியினர். அப்பகுதியில் உள்ள மாணவர்களை படிக்க வைப்பது உள்ளிட்ட உதவிகளை பால்பாண்டி ஒரு தொண்டு நிறுவனம் மூலம் செய்து வருகிறார். மீனா கருவுற்று இருந்த நிலையில், வெள்ளியங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென மீனாவின் கர்ப்பப்பையில் நீர் குறைந்ததால், மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைக்கு செல்வதில் பால்பாண்டி, மீனா தம்பதிக்கு அச்சம் இருந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டால் தங்களது கிராமத்தினர் ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்ற அச்சமே அதற்கு காரணமாக இருந்தது. இதையடுத்து மேட்டுப்பாளையத்தில் உள்ள மருத்துவமனைகளில் விசாரித்த பால்பாண்டி, மீனாவை சுபா என்ற மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதையடுத்து அம்மருத்துவமனையில் கடந்த 8 ம் தேதி மீனாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. சமூகப்பணிகளை பால்பாண்டி செய்வதை அறிந்த அம்மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் மகேஸ்வரன், கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம் எனக்கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்துப் பேசிய மருத்துவர் மகேஸ்வரன், “மீனாவின் நச்சுக்கொடி குழந்தையின் கழுத்தை சுற்றியிருந்தது. அவர் தாமதமாக அனுமதிக்கப்பட்டு இருந்தால் ஆபத்தாகி இருக்கும். சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு குறைவு என்பதால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.
நண்பர்கள் மூலம் பால்பாண்டி பல்வேறு சமூகப்பணிகளை செய்து வருவதை அறிந்தேன். மனைவி பிரசவத்திற்காக சேர்த்த பணத்தில் கூட, காட்டுமாடு தாக்கிய ஒருவரின் சிகிச்சைக்காக வழங்கி விட்டு வந்துள்ளார். பழங்குடியின மக்களுக்கு நான் பல்வேறு உதவிகளை செய்து வருகிறேன். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பால்பாண்டிக்கு நான் ஒரு உதவி செய்துள்ளேன். அவ்வளவு தான்” என்றார் தன்னடக்கத்துடன்.
தொடர்ந்து பேசிய மகேஷ்வரன், “நான் என்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகிறேன். மருத்துவமனையின் முதல் தளத்தில் இலவச நூலகம் நடத்தி வருகிறேன். வீட்டில் படிக்க முடியாதவர்கள், தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவிக்கரமாக இந்த நூலகம் இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 40 பேர் கல்வி பயில உதவி வருகிறேன்.
கடந்தாண்டு கொரோனா முதல் அலை காலத்தில் மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளை அளித்தேன். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகளை செய்து வருகிறேன். கஜா புயல், வயநாடு மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் மருத்துவ உதவிகளை செய்துள்ளேன்.
எனது மனைவியும் மருத்துவர். எனது அப்பா ஒய்வு பெற்ற காவல் துறை அதிகாரி. அவர்களது வருமானம் முழுவதும் குடும்பத்திற்கு. எனது வருமானம் முழுவதும் மக்கள் பணிகளுக்கே” என அவர் தெரிவித்தார்.
மக்கள் மருத்துவரின் மனிதநேய சேவை தொடரட்டும்.