கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கி இருப்பதாகவும், போலி ரூபாய் நோட்டுகளை காட்டி பணம் மோசடி செய்து வருவதாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் பிரஸ் காலணியில் உள்ள பாலாஜி கார்டன் பகுதியில் சோதனை நடத்தினர்.


அப்போது ஒரு வீட்டில் அட்டை பெட்டியில் 2 ஆயிரம் ரூபாய் தாள்களைப்போல தோற்றம்கொண்ட கள்ள நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இந்த நோட்டுகள் 9 பெட்டிகளில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர். இது தவிர 2 இரிடியம் கலசம் இருந்தது.




இது தொடர்பாக அந்த  வீட்டில் இருந்த விருதுநகரை சேர்ந்த  காளிமுத்து (28), நாமக்கல்லை சேர்ந்த விஜயகுமார் (35), திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் ஆகிய  மூன்று பேரை  கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 9 அட்டை பெட்டிகளில் இருந்த பல இலட்ச ரூபாய் மதிப்பிலான போலி 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் இரண்டு இரிடியம் கலசம், லேப்டாப், 4 மொபைல் போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இவற்றை பதுக்கி வைத்திருந்த முக்கிய குற்றவாளியான சடகோபால் என்ற நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 




காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவர்கள் இரிடியம் இருப்பதாக சொல்லி மோசடி செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. ப்ரத்யேகமான தாள்களை பயன்படுத்தி ரூபாய் நோட்டுகளை கலர் பிரிண்டர் வைத்து தயார் செய்து இருப்பதும், டாஸ்மாக் கடை உள்ளிட்ட பல்வேறு கூட்டம் மிகுந்த இடங்களில் இந்த நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருப்பதும் தெரியவந்தது.


மேலும் ஒரிஜினல் ரூபாய் தாள்களை வாங்கிக்கொண்டு போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்திருக்கலாம் எனவும், கைதான கும்பல் நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கைவரிசை காட்டியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கள்ள நோட்டுகள் கட்டக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Also Read : Biggboss In Trouble? : பிக்பாஸ் திட்டமிட்டபடி ஒளிபரப்பாகுமா? நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் பரபரப்பு..


Crime : திரைப்பட பாணியில் கடத்தப்பட்ட 200 கிலோ ஹெராயின்.. மடக்கிப் பிடித்த அதிகாரிகள்.. கொச்சியில் நடந்தது என்ன?


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண