தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவான 'பிக் பாஸ் 6' (தெலுங்கு சீசன்) நிகழ்ச்சி ஆபாசத்தை ஊக்குவிப்பதாக தெரிவித்து ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ அனைத்து மொழிகளிலும் அதிகம் விரும்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். ஹிந்தி பிக்பாஸில் சல்மான் கான், மராத்தியில் மகேஷ் மஞ்ச்ரேக்கர், பிக் பாஸ் தமிழில் கமல்ஹாசன், கன்னடம் மற்றும் தெலுங்கு முறையே கிச்சா சுதீப் மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
கடந்த 3வது சீசனின் போது அதன் போட்டியாளர்களான காயத்ரி குப்தா மற்றும் ஹதராபாத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஸ்வேதா ரெட்டி ஆகியோர் நடிக்க வைப்பதற்காக பாலியல் ரீதியாக தங்களுக்கு இணங்க சொல்லியதாக கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். அப்போது இந்த செய்தி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் தெலுங்கு சீசன் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.
நாகார்ஜுனா தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 6 தெலுங்கு அதன் ஒளிபரப்பு நேரங்கள் காரணமாக மீண்டும் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கேதிரெட்டி ஜெகதீஸ்வர் ரெட்டி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். நிகழ்ச்சியில் 'ஆபாசமாக' இருப்பதாகக் கூறி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஒளிபரப்பு வழிகாட்டுதல்கள் நிறைவேற்றப்படாவிட்டால் நிகழ்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், “'பிக்பாஸ்' தெலுங்குப் பதிப்பு சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியானது 24/7 என்ற அடிப்படையில் பல கேமராக்களால் பதிவுசெய்யப்பட்டு நேரலையாக வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒருவருக்கு எதிராக ஒருவர் சதி செய்து, பங்கேற்பாளர்கள் தோல்வியுற்றால், பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்துமாறு கோரும் ஒரு செயலை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்கின்றனர். அதிகமாக மற்ற போட்டியாளர்களை புண்படுத்தும் பங்கேற்பாளர் வெற்றியாளராக அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுவார். வீட்டில் வாழ்வதற்கும், பிரபலம் பெறுவதற்கும் இது மிக மோசமான செயலாக உள்ளது
எந்தவித தணிக்கையும் இல்லாமல் காட்சிப்படுத்துவது ஆபாசம், அநாகரிகம் மற்றும் வன்முறையை ஏற்படுத்துகிறது. அதை ஊக்குவிக்கிறது. சட்டவிரோதமான, இந்த பிக்பாஸ் தெலுங்கு சீசன் 6 ஒழுக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் தவறான நடத்தைகளை ஊக்குவிப்பது போன்றும், மிகவும் பாராட்டப்படுவது போல் இருக்கிறது. இதன் மூலம் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர், அதிலும், குறிப்பாக (பெண் குழந்தைகள் மற்றும் இளம் வயது பெண்கள்) அதிகமாக பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அதேபோல், இளம் நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் குறுகிய காலத்தில் புகழ் மற்றும் பணத்திற்காக சட்டவிரோத மற்றும் அசாதாரண செயல்களை செய்ய தூண்டுகிறது, இதனால் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கிறது, "என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.
மேலும் மனுவில், பிக் பாஸ் 6 தெலுங்கு தற்போது வார நாட்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரை மற்றும் வார இறுதி நாட்களில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. வார இறுதி நாட்களில், நாகார்ஜுனா ஹவுஸ்மேட்ஸ் மற்றும் லைவ் பார்வையாளர்களுடன் செட்டில் பேசுகிறார். இது முன்னதாக இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. எனவே, இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கு அக்டோபர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்