கேரளாவில் 200 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற சந்தேகத்திற்கிடமான கப்பலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்து கப்பலில் இருந்தவர்களை கைது செய்துள்ளனர். 


போதைப் பொருளுக்கு மத்திய மாநில அரசுகள் என்னதான் பல்வேறு தடைகளையும் அதிரடி நடவடிகைகளையும் எடுத்தாலும், சமூக விரோதிகளால் சட்ட விரோதமாக போதைப் பொருள் கடத்தப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. மேலும், போதை பொருட்களால் சமகாலத்தில் பள்ளி படிக்கும் சிறுவர்கள் உட்பட, கல்லூரி படிக்கும் இளைஞர்கள் உட்பட அதிகப்படியான பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 


கேரளாவைப் பொறூத்த வரையில் மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் போதை பழக்கத்தில் இருந்து மீட்பதற்கான பல்வேறு மறு வாழ்வு மையங்களையும் ஏற்படுத்தி வந்தாலும், அதிகப்படியான போதைப் பொருள் புழக்கத்தில் உள்ள மாநிலத்தில் கேரளாவுக்கும் முக்கிய இடம் உள்ளது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (NCB) கடலோரக் காவல் துறை மற்றும் இந்தியக் கடற்படை இணைந்து நடத்திய நடவடிக்கையில் இரு தினங்களுக்கு முன்பு கொச்சி கடற்கரையில் ஈரானிய கப்பல் ஒன்றில் இருந்து சுமார் 200 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது.


புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கையைத் தொடர்ந்து நடுக்கடலில் இருந்து கைப்பற்றப்பட்ட கப்பல் மட்டாஞ்சேரியில் உள்ள துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. கப்பலில் 6 பணியாளர்கள் இருந்துள்ளனர், அதில் 4 பேர் ஈரானிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மற்ற இருவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரை  கண்டறியப்படவில்லை.  முதற்கட்ட விசாரணை அடிப்படையில், ”ஆப்கானிஸ்தானில் இருந்து கேரளாவுக்கு போதைப் பொருளான ஹெராயின் கொண்டுவரப்பட்டது. சர்வதேச போதைப்பொருள் கும்பல் ஒன்று இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு இதேபோன்று ஈரானிய மற்றும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட ஈரானிய கப்பல் ஒன்று, ஆலப்புழாவில் இருந்து 58.5 கடல் மைல் தொலைவில் (சுமார் 108 கிமீ) தொலைவில் கடலோர காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சத்திற்கு கொண்டு வரப்பட்டது. தேசிய புலனாய்வு முகமை இந்த விசாரணையை மேற்கொண்ட போதிலும், அப்போது போதைப்பொருள் கடத்தல்காரர்களால் போதைப்பொருளை மீட்க முடியாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். 


பலகோடி மதிப்புள்ள போதைப் பொருளான 200 கிலோ ஹெராயின்  கடத்தப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு மட்டும் இல்லாமல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியுள்ளது. 200 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற சந்தேகத்திற்கிடமான கப்பலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்து கப்பலில் இருந்தவர்களை கைது செய்துள்ளது மட்டும் இல்லாமல் தீவிரமான விசாரணை நடத்தி வருகிறது.