கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தீபாவளி போனஸ் கொடுக்காத கடையின் முன்பு தூய்மைப் பணியாளர் குப்பை கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் இயங்கி வருகின்றன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் என்பவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராமச்சந்திரா சாலையில் எல்.இ.டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜேம்ஸ் கடைக்கு கடந்த 4 ஆம் தேதி தூய்மைப் பணியாளர் ஒருவர் வந்து அப்பகுதியில் தூய்மை பணி செய்து வருவதாகவும், தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி தீபாவளி போனஸ் வழங்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது 20 ஆம் தேதிக்கு மேல் தருவதாக ஜேம்ஸ் கூறியுள்ளார். 


அப்போது உடனடியாக 500 ரூபாய் தர வேண்டும் என அந்த தூய்மைப் பணியாளர் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அந்த தூய்மைப் பணியாளர் அங்கிருந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி காலையில் அந்த தூய்மைப் பணியாளர் அந்த கடை அருகே இருந்த குப்பையை எடுத்து வந்து, பூட்டப்பட்டு இருந்த கடை முன்பாக கொட்டியுள்ளார். இது அந்த கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.




பின்னர் கடையை திறக்க ஜேம்ஸ் வந்து பார்த்த போது, கடையின் முன்பாக குப்பைகள் கொட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அந்த குப்பைகளை அங்கிருந்து அகற்றி தூய்மை செய்துள்ளார். கடை முன்பு எப்படி குப்பை வந்தது என்பதை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் ஜேம்ஸ் பார்த்துள்ளார். அப்போது தூய்மைப் பணியாளர் குப்பைகளை எடுத்து வந்து கடை முன்பாக கொட்டியது தெரியவந்தது. இந்த காட்சிகளை ஜேம்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். 


தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பல தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொரு வீடு மற்றும் கடைகளில் பணம் கேட்டு வருவதாகவும், கோவை மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் பணம் கேட்டு கொடுக்காத கடை முன்பு தூய்மைப் பணியாளர் சிலர் குப்பையை கொட்டி செல்வது வாடிக்கையாக கொண்டு இருப்பதாகவும் அப்பகுதி வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். வலுக்கட்டாயமாக வியாபாரிகளிடம் தீபாவளி பணம் கேட்கும் ஊழியர்கள் மீது கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கடையின் முன்பு குப்பைகளை கொட்டிய தூய்மை பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தீபாவளி போனஸ் கொடுக்காத கடை முன்பு தூய்மைப் பணியாளர் குப்பை கொட்டிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




Also Read : Crime: பாஸ்போர்ட் இணையதளத்தில் ஊடுருவிய ஹேக்கர்ஸ்..! அடுத்து நடந்தது என்ன தெரியுமா..?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண