கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த கோவை தங்கம் உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார்.


கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் கோவை தங்கம். 73 வயதான இவர் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துவங்கிய போது அக்கட்சியில் இணைந்து பணியாற்றினார். கடந்த 2001 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு, கோவை தங்கம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். பின்னர் 2006 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு, அவர் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற அவர், பத்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வால்பாறை தொகுதியில்  போட்டியிட்ட அவர், வெற்றி வாய்ப்பை இழந்தார்.


காங்கிரஸ் கட்சியில் இருந்து மீண்டும் ஜி.கே.வாசன் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் பிரிந்த போது, கோவை தங்கம் அக்கட்சிக்கு சென்றார். தமாகா கட்சியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இதனிடையே கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக, தமாகா கூட்டணி சார்பில் வால்பாறை தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 


இதனால் அதிருப்தி அடைந்த கோவை தங்கம் சட்டமன்ற தேர்தலில் தனக்கு வால்பாறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததற்கு காரணம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி என குற்றம்சாட்டினார். அதிமுக மற்றும் தமாகா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், தமாகாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். வால்பாறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்தார். பின்னர் அம்முடிவில் இருந்து பின்வாங்கிய அவர், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். 2011ம் ஆண்டு தேர்தலில் தன்னை தோற்கடித்தவருக்கு ஆதரவாக, அத்தேர்தலில் வாக்கு சேகரித்தார். இருப்பினும் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை தங்கம் திமுகவில் இணைந்து, பணியாற்றி வந்தார்.


இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவினால் கோவை தங்கம் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி கோவை தங்கம் உயிரிழந்தார். சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண