கோவைக்கு கொரோனா தடுப்பூசி விநியோகிப்பதில்லை என்றும், கொரோனா விவகாரத்தில் கோவையை தமிழக அரசு புறக்கணிப்பதாக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறிய நிலையில், கோவை மாவட்டத்தில் தான் கொரோனா தடுப்பூசி அதிகம் போடப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
கொரோனா பாதிப்பில் சென்னையை முந்தி கோவை முதல் இடத்தில் இருந்து வருகிறது. இதையடுத்து, கோவையில் கொரோனா தொற்றை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க,.ஸ்டாலின் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முடக்கி விட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவைக்கு கொரோனா தடுப்பூசி விநியோகிப்பதில்லை என்றும், கொரோனா விவகாரத்தில் கோவையை தமிழக அரசு புறக்கணிப்பதாகவும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பதிலளித்துள்ளார். அவரது பேட்டியில், “தமிழ்நாட்டுக்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசுதான் பாரபட்சம் காட்டுகிறது. கோவை மாவட்டத்தில்தான் கொரோனா தடுப்பூசி அதிகம் போடப்பட்டிருக்கிறது. மத்திய பாஜக அரசிடம் பேசி தமிழகத்துக்கான தடுப்பூசிகளை வானதி சீனிவாசன் பெற்று கொடுக்க வேண்டும்” என்று கூறினார். மேலும், தடுப்பூசி முகாம்களில் திமுகவினர் தலையீடு இல்லை என்று முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் கூறினார்.
மேலும் அவர் அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து, குணமடைவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. விரைவில் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழும். தமிழ்நாட்டில் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாட்டில் 87.7 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கோவையில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனால் கோவையில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கோவையில் முகாமிட்டு பணியாற்றி வருகின்றனர். இதேபோல கடந்த இரண்டு நாட்களாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கவச உடையில் நலன் விசாரிப்பு, பெண்கள் மனு, ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் : முதல்வர் ஆய்வின் முழு தகவல்
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டிற்குள் சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.