கவச உடையில் நலன் விசாரிப்பு, பெண்கள் மனு, ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் : முதல்வர் ஆய்வின் முழு தகவல்

இந்தியாவிலேயே முதலமைச்சர் ஒருவர் பி.பி.இ கிட் அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டிற்குள் சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

Continues below advertisement

கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கோவையில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனால் கோவையில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கோவையில் முகாமிட்டு பணியாற்றி வருகின்றனர். இதேபோல கடந்த இரண்டு நாட்களாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ல மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளுக்கு பின்னர், கோவைக்கு ஸ்டாலின் கார் மூலம் வருகை தந்தார். பின்னர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 50 கோவிட் கேர் கார் ஆம்புலனஸ் வாகனங்களை கொடி அசைத்து துவங்கி வைத்தார். கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கு 10 கார்கள் வீதம் 50 கோவிட் கேர் ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டிற்கு வந்தன. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இதையடுத்து பி.பி.இ கிட் எனப்படும் பாதுகாப்பு கவச அடை அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவிற்குள் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம் ஸ்டாலின் நலம் விசாரித்தார். மேலும் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

இந்தியாவிலேயே முதலமைச்சர் ஒருவர் பி.பி.இ கிட் அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின்போது சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனிடையே பாரதி நகர் பகுதியில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும், முறையாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 10க்கும் மேற்பட்ட  பெண்கள் மருத்துவமனை வாசலில் மனு அளிக்க காத்திருந்தனர். ஆய்வை முடித்துக் கொண்ட வெளியே வந்த முதலமைச்சர் ஸ்டாலின் பெண்களிடம் மனுவினை பெற்று, உரிய நடவடிக்கை எடுப்படதாக உறுதியளித்தார். இன்று மாலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசணைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

Continues below advertisement