கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவர்களைப் போல பிபிஇ கிட் அணிந்து நோயாளிகளை நேரடியாக பார்த்தேன். மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் உரையாடினேன். பிபிஇ கிட் உடை அணிவது எவ்வளவு கஷ்டம் என்பது அனைவருக்கும் தெரியும். பல மணிநேரம் அந்த உடையை அணிந்து பணியாற்றுபவர்களின் சேவை பாராட்டுக்குரியது. அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நம்பிக்கை, உற்சாகம், ஊக்கத்தை அளிக்க வேண்டுமென்பதற்காக அந்த உடை அணிந்து சென்று ஆய்வு மேற்கொண்டேன்.
கொரோனா தினசரி உச்சம் கர்நாடகா மாநிலத்தில் 50 ஆயிரம், கேரளாவில் 43 ஆயிரம் என்ற அளவில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 36 ஆயிரம் என்ற நிலையை தான் அடைந்தது. தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கினால் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. குறிப்பாக சென்னையில் தொற்றுப் பரவல் குறைந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையை விட அதிக பாதிப்பில் இருந்த கோவையில் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, தொற்று இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது. கர்நாடகா, கேரளா மாநிலத்தில் இருந்து வருபவர்கள், வட மாநில தொழிலாளர்கள், ஒரே இடத்தில் அதிக தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் அதிகம் காரணமாக கோவையில் தொற்று அதிகரித்தது. கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்கிறது.
கோவையில் அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் தங்கி பணியாற்றி வருகின்றனர். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார். சென்னையைப் போல மாவட்டங்களிலும் கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர் தொடர்புகொள்ள 4 கட்டுப்பாட்டு மையங்களும், மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு குழு, பறக்கும் படை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. 4009 ஆக்சிஜன் படுக்கைகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக கொரோனா பரிசோதனைகளை செய்து வருகிறோம். கோவையில் 5 இலட்சத்து 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு இலட்சத்து 53ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கோவை புறக்கணிக்கப்படுவதாக சிலர் அரசியல் நோக்கத்தோடு சொல்லி வருகின்றனர். அவர்கள் கோவையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை நேரடியாக பார்வையிட வேண்டும். அப்படி பார்த்தால் விமர்சிக்க மாட்டார்கள். எல்லா ஊரும் எங்கள் ஊர் தான். பரபட்சம் பார்ப்பதில்லை. நான் ஏற்கனவே சொல்லியது போல திமுகவிற்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையிலும், வாக்களிக்காதவர்கள் ஏன் வாக்களிக்கவில்லை என வருத்தப்படும் அளவிலும் எங்கள் ஆட்சி அமையும். எந்த பாரபட்சமும் காட்டமாட்டோம்.
கோவையில் 631 நகரப்பகுதிகளும், 302 கிராமப்பகுதிகளும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் ஆட்கள் நடமாட்டம் முற்றிலும் இருக்கக்கூடாது. ஒவ்வொருவரும் கொரோனா தொற்றை தரவும் மாட்டோம், பெறவும் மாட்டோம் என்ற உறுதியை ஏற்க வேண்டும். இந்தியாவில் அதிக ஆக்சிஜன் வசதி கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கூடுதல் வசதி ஏற்படுத்தி வருகிறோம்.
செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதனை மத்திய அரசு ஏற்று நடத்த வேண்டும். இல்லையெனில் மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும். முழு ஊரடங்கு வெற்றி பெற்றால் தான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும். அடுத்த ஊரடங்கு அறிவிக்கும் போது சில தளர்வுகள் அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படுக்கப்படும். வங்கிகள் இஎம்ஐ வசூலிப்பதை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளேன். இதுகுறித்து பதில் வந்த பின்னர் முடிவெடுக்கப்படும். ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தான்தோன்றித்தனமாக முடிவெடுக்கவில்லை. நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போது அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டச் சொன்னோம். அப்போது நீங்கள் டாக்டரா எனக் கேட்டார்கள். நாங்கள் அப்படிக் கேட்கவில்லை. அனைத்து தரப்பினரிடமும் ஆலோசணை நடத்தியதன் அடிப்படையில் தான் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அரசியல் காரணம் அல்ல. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அனை கட்டுவதை எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம்” என தெரிவித்தார்.