கோவை மாவட்டம் அன்னூரில் தாயை இழந்த வட்டார வளர்ச்சி பெண் அலுவலருக்கு, அலுவலக பெண் ஊழியர்களே தாய் ஸ்தானத்தில் இருந்து வளைகாப்பு நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக குணவதி என்பவர் பணியாற்றி வருகிறார். ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை பூர்விகமாக கொண்ட இவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் குணவதி கருவுற்று நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் அண்மையில் குணவதியின் தாயார் காலமாகிவிட்டார். இதன் காரணமாக குணவதி கவலையுடன் இருந்து வந்ததாக தெரிகிறது. 




நிறைமாத கர்ப்பிணியாக இருந்த குணவதி தாய் இல்லாமல் வளைகாப்பு நடக்குமா என மனச் சோர்வுடன் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் குணவதியின் மன வலியை போக்கும் வகையில் அவருடன் பணியாற்று சக பெண் ஊழியர்கள் ஒருங்கிணைந்து வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதன்படி அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குணவதிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமா தலைமையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணியான குணவதிக்கு சக ஊழியர்கள் வளையல் போட்டு, பொட்டு, பூ வைத்து ஆர்த்தி எடுத்து தாய் ஸ்தானத்தில் இருந்து வளைகாப்பு நடத்தினர். 




இது குறித்து அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமா கூறுகையில், “எங்களது அலுவலகத்தில் பணியாற்றும் குணவதி 8 மாதம் கர்ப்பமாக உள்ளார். அவருக்கு அலுவலகத்தில் சக ஊழியர்கள் இணைந்து சிறப்பாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி உள்ளோம். இதனால் குணவதி மகிழ்ச்சி அடைந்துள்ளார்” என அவர் தெரிவித்தார்.




வளைகாப்பு நிகழ்ச்சியால் மனம் மகிழ்ந்த கர்ப்பிணி குணவதி, ஒவ்வொரு ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டார். தாய் இல்லாத பெண் அலுவலருக்கு சக அலுவலர்கள் இணைந்து வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சி அடைய செய்தது.


மேலும் படிக்க : Madurai: சித்தூரில் கி.பி.13 ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிற்பம், நடுகல் கண்டுபிடிப்பு !


மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண