தமிழ்நாடு அரசின் 2022 -2023 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிதி நிலை அறிக்கையில் தொழில் துறையினர் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தொழில் நகரமாக உள்ள கோவைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கோவை தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
நிதிநிலை அறிக்கை எதிர்பார்ப்புகள் தொடர்பாக கொடிசியா அமைப்பின் தலைவர் ரமேஷ்பாபு கூறுகையில், “மூலப்பொருட்கள் விலை உயர்வினால் தொழில் துறையினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பு குழுவை அமைக்க வேண்டும். கொடிசியா உள்ளிட்ட தொழில் அமைப்புகள் கலந்தாலோசித்து, பரிந்துரைகளை பெற வேண்டும். அந்த சிறப்பு குழு மூலப்பொருட்கள் விலை உயர்வுக்கு தீர்வு காண்பதற்கான பரிந்துரைகளை மத்திய அரசிடம் ஒப்படைத்து, அவற்றை அமல்படுத்த கோர வேண்டும். வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய குழு இல்லை. எனவே இந்த குழு அமைக்கப்படுவது முன் மாதிரியாக அமையும்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் தொழில் பூங்கா அமைக்க 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை துவக்க வேண்டும். தொழில் பூங்கா அமைந்தால் பல பெரிய நிறுவனங்கள் கோவைக்கு வர வாய்ப்புள்ளது. தொழில் நகரமான கோவையில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. சாலைகளை சீரமைக்க மாநகராட்சியிடம் பணம் இல்லை என்கின்றனர். எனவே சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
டேக்ட் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், “கொரோனா பாதிப்பு, மூலப்பொருட்கள் விலை உயர்வினால் குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய பட்ஜெட்டில் ஏமாற்றமே மிஞ்சியது. எனவே தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தொழில்களை பாதுகாக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கிறோம். குறுந்தொழில் முனைவோர்களுக்கு 2 இலட்ச ரூபாய் வரை தாய்கோ வங்கி மூலம் மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும். தொழிற்பேட்டைகள் அமைப்பது என்பது அரசால் மட்டுமே முடியும். மாதத் தவணை முறையில் அரசு தொழிற்பேட்டை அமைத்து தர வேண்டும். குறுந்தொழில் முனைவோருக்கு 25 ஹெச்.பி. வரை மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சிறு, குறு தொழில் சங்கத்தின் துணைத்தலைவர் சுருளிவேல் கூறுகையில், “குறுந்தொழில்களுக்கு தனி கடன் திட்டம் அறிவிக்க வேண்டும். இரண்டு இலட்ச ரூபாய் வரை பிணையில்லாத கடன் அனைத்து குறுந்தொழில் முனைவோர்களுக்கு வழங்க வேண்டும். பட்ஜெட்டில் புதிய வரிகள் இருக்கக் கூடாது. எந்த வரியையும் இரண்டு ஆண்டுகளுக்கு ஏற்றக் கூடாது. மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், மாவட்டந்தோறும் குறுந்தொழில் பேட்டைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.